12 வயதும் அதற்குக் குறைந்த வயதுமுடைய சிங்கப்பூர்க் குழந்தைகளுக்கு $500 நிதியுதவி

12 வயதும் அதற்குக் குறைந்த வயதுமுடைய சிங்கப்பூர்க் குழந்தைகளுக்கு $500 நிதியுதவி

2 mins read
4c7bb93c-7fd4-4f91-bd43-c668cf8b6793
தகுதிபெற்ற குழந்தைகளின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) முதல் உதவித்தொகை போடப்படும்.  - lபடம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

2026ஆம் ஆண்டில் 12 வயதும் அதற்குக் குறைந்த வயதுமுடைய சிங்கப்பூர்க் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், ஒவ்வொரு குழந்தைக்கும் $500 உதவித்தொகையைப் பெறவிருக்கின்றன.

குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) முதல் அது வரவு வைக்கப்படும். ‘சைல்ட் லைஃப்எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படும்.

மளிகைப்பொருள்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், மருந்துமாத்திரைகள் முதலியவற்றை வாங்குவதற்கு அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2014ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினர், ஜூலை 14 முதல் நிதியுதவியைப் பெறுவார்கள்.

அதேநேரம், இவ்வாண்டு பிறந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்கப்படும். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு திங்கட்கிழமை (ஜூலை 13) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகளை வளர்ப்பதற்காகும் செலவுகள் தொடர்பில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி அமைகிறது. இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் அதுபற்றி அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு 450,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கணக்கில் போடப்பட்ட $500 ‘சைல்ட் லைஃப்எஸ்ஜி’ உதவித்தொகைக்கும் கூடுதலாக அண்மை நிதியுதவி அமைகிறது.

தகுதியுள்ள குழந்தையின் குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் உதவித்தொகை தானாகவே வரவு வைக்கப்படும். தகுதி மதிப்பீட்டுத் தேதியான ஜூன் மாதம் முதல்தேதிப்படி, அமைச்சிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் அது வழங்கப்படும்.

பேநவ், யுஇஎன் கியூஆர், நெட்ஸ் கியூஆர் வழியாகக் கட்டணங்களை ஏற்கும் இணைய வணிகர்களிடமும் கடைகளிலும் அண்மை உதவித்தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிதியுதவியைப் பெற விண்ணப்பம் தேவையில்லை. குழந்தைகளின் அறங்காவலர்கள், ‘லைஃப்எஸ்ஜி’ செயலி மூலம் அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

செயலியில் உள்ள மின்னிலக்கக் கணக்கில் உதவித்தொகை சேர்க்கப்பட்ட பிறகு, அதைப் பெறுவோர்க்குக் குறுந்தகவல் அனுப்பப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்குழந்தைகள்குடும்பம்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுபிரதமர்லாரன்ஸ் வோங்