500 புதிய தனித் தோட்ட நிலங்கள்: அக்டோபர் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

500 புதிய தனித் தோட்ட நிலங்கள்: அக்டோபர் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

படம்: சாவ்பாவ்

19 Oct 2026 - 8:09 pm

2 mins read

சிங்கப்பூர் முழுவதும் உள்ள 13 பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள 500 புதிய தனித் தோட்ட நிலங்களுக்கு நகர்ப்புற விவசாயிகளும் தோட்டக்கலை ஆர்வலர்களும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசியப் பூங்காக் கழகம் திங்கட்கிழமை (அக்டோபர் 19) தெரிவித்தது.

ஹோர்ட்பார்க் (91 நிலங்கள்), பொங்கோல் வாட்டர்வே பார்க் (84 நிலங்கள்), பீஷான்-அங் மோ கியோ பார்க் (68 நிலங்கள்) ஆகிய பூங்காக்களில் பெரும்பாலான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர கிளமெண்டி வுட்ஸ் பார்க், பிடோக் ரெசர்வோர் பூங்கா, வெஸ்ட் கோஸ்ட் பார்க், லோவர் சிலத்தார் ரெசர்வோர் பூங்கா, வில்லா வெர்டே பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா பகுதி ‘ஏ’, செம்பவாங் பூங்கா, புக்கிட் கான்பெரா, ஈசூன் அக்கம்பக்கப் பூங்கா, கென்ட் ரிட்ஜ் பூங்கா ஆகிய 10 இடங்களிலும் மீதமுள்ள தோட்ட நிலங்கள் அமைந்திருக்கும்.

ஆர்வமுள்ள பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நவம்பர் 2ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இந்த நிலங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஏஎக்ஸ்எஸ் மின் முனையங்கள், சேவை மையங்கள் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் தேர்வாகாத விண்ணப்பதாரர்களுக்கு 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் மின்னஞ்சல் வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடுவதற்காக, 2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனித் தோட்டச் திட்டத்தின்கீழ் இந்தப் புதிய நிலங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், ஒரு குடும்பம் ஒரே நேரத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் உள்ள ஒரு தோட்ட நிலத்துக்கு மட்டுமே விண்ணப்பித்துக் குலுக்கலில் பங்கேற்க முடியும்.

ஒவ்வொரு தோட்ட நிலத்திற்கும் ஆண்டுக்கு $65.40 கட்டணமாக வசூலிக்கப்படும். அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை இந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மண் நிரப்பப்பட்ட உயர்த்தப்பட்ட பயிர்த்தளமும் (2.5 மீட்டர் x 1 மீட்டர்) தோட்டக்கலை உபகரணங்களை வைத்துக்கொள்ளச் சிறிய சேமிப்பு இடமும் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
தோட்டக்கலைவிண்ணப்பம்நிலம்