இளையர் திறன் வளர்க்க $500 ஆர்வ ஊக்குவிப்புச் சலுகை

இளையர் திறன் வளர்க்க $500 ஆர்வ ஊக்குவிப்புச் சலுகை

2 mins read
04752287-2811-4a36-8055-980a5ed21a35
ஜூலை 25ஆம் தேதியன்று ஆர்வ ஊக்குவிப்புச் சலுகைகள் குறித்து தமிழ் முரசிடம் விளக்கினார் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ. - படம்: சுந்தர நடராஜ்

இளையர்கள் கல்விக்கு அப்பாற்பட்டு பிற திறமைகளையும் ஆர்வங்களையும் வளர்த்துக்கொள்ள $500 மதிப்புள்ள ‘ஆர்வ ஊக்குவிப்புச் சலுகைகள்’ (Curiosity Credits) வழங்கப்படவுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ நாடாளுமன்றத்தில் முன்வைத்த யோசனைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இத்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், சுய உதவிக்குழுக்களின் ஆதரவைப் பெறும் 13 முதல் 17 வயதுடைய இளையர்களுக்கு $500 மதிப்புள்ள ஆர்வ ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்படும்.

நிதிச் சுமையின்றி, கலை, விளையாட்டு, தொழில்நுட்பம், சமையற்கலை, நீடித்த நிலைத்தன்மை எனப் பலதரப்பட்ட துறைகளில் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள அத்தொகையை அவர்கள் பயன்படுத்தலாம்.

ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற எஸ்ஜி இளையர் மன்றத்தில் அறிவிக்கப்பட்ட எஸ்ஜி இளையர் திட்டத்தின் ஓர் அங்கமாக இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்துத் தமிழ் முரசிடம் பேசிய திரு டேவிட் ஹோ, தாம் முன்மொழிந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

“வசதி குறைந்த இளையர்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்கி, இளையர்களுக்கிடையே வாய்ப்பு இடைவெளியைக் குறைக்க இத்திட்டம் உதவும்,” என்று திரு ஹோ உறுதியாகக் கூறினார்.

இத்தொகை ஒரு தொடக்கப்புள்ளியாக மட்டுமே அமையும் என்றும் திறமையை வெளிக்கொணரக் காலமும் பயிற்சியும் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திறன்களை வளர்க்க உதவுவதோடு, பள்ளி வட்டாரத்தைத் தாண்டிப் புதிய நண்பர்களை உருவாக்கவும் இத்திட்டம் இளையர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

தற்போது சுய உதவிக் குழுக்கள்மூலம் உதவி பெறும் இளையர்களுக்கு ஒரு முன்னோடித் திட்டமாக இது விளங்குகிறது. இருப்பினும், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது திரு ஹோவின் கருத்து.

“சிங்கப்பூரிலுள்ள ஒவ்வோர் இளையர்க்கும் ஆர்வ ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில் இருக்கும்வரை இத்திட்டம் விரிவடைய குரல் கொடுப்பேன் என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, ஆர்வ ஊக்குவிப்புச் சலுகைகள் குறித்த மேல்விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திறன் மேம்பாடுஇளையர்திட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்நாடாளுமன்றம்