புற்றுநோய் விழிப்புணர்வு, ஆய்வுக்கு ஆதரவு திரட்டும் ‘ரன் ஃபார் ஹோப் 2026’ நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
மரினா அணைக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் சிங்கப்பூர், சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத்துடன் (என்சிசி) இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
33வது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து, கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சரும் வடகிழக்கு வட்டார மேயருமான திரு பே யாம் கெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் ஓட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்நிகழ்ச்சி, புற்றுநோய் ஆய்வை மேம்படுத்த என்சிசி ஆய்வு நிதிக்கு 2.7 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகத் திரட்டியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்புக்குரியவர்களுக்குத் துணைநிற்கவும் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும் பங்கேற்பாளர்கள் ஓடினர். ஆண்டுதோறும் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் சிங்கப்பூரின் வட்டாரத் துணைத் தலைவரும் பொது நிர்வாகியுமான பீட்டர் டிராமின்ஸ்கி கூறினார்.
முதன்முறையாக, இந்நிகழ்ச்சிக்கான அதிகாரபூர்வச் சட்டையைச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலைய நோயாளியும் முழுநேரக் கலைஞருமான திருவாட்டி சிண்டி நியோ வடிவமைத்தார். ‘ரூம் டு இமேஜின்’ கலைக்கூடத்தின் நிறுவனரான அவர், நாடா உருவத்துடன் கூடிய அவ்வடிவமைப்பை உருவாக்கினார். விண்மீன் திரள்கள், பெருங்கடல்களின் அலைகளிலிருந்து உத்வேகம் பெற்ற இவ்வடிவமைப்பு வலிமை, உருமாற்றம், நம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
2017ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திருவாட்டி சிண்டி நியோ, தமக்குச் சிகிச்சை அளித்த நிலையத்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இதனை வடிவமைத்ததாகக் கூறினார். புற்றுநோய் ஆய்வுக்காக ஒன்றிணைந்துள்ள ஆயிரக்கணக்கானோர் தமது வடிவமைப்பை அணிந்திருப்பது மிகுந்த மனநிறைவைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் 2019 முதல் 2023 வரை 91,574 புற்றுநோய்ப் பாதிப்புகள் பதிவாகின. நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சைகளை உருவாக்கப் புற்றுநோய் ஆய்வில் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம் எனச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் லிம் சூன் தை வலியுறுத்தினார்.
அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயனுள்ள சிகிச்சைகளாக மாற்றவும், புற்றுநோயற்ற எதிர்காலத்தை உருவாக்கவும் ஒவ்வொரு பங்களிப்பும் உதவும் என்றார் அவர். ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் சிங்கப்பூர், பங்கேற்பாளர்கள், ஆதரவாளர்களின் தொடர் அர்ப்பணிப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
பொதுமக்கள் 2026 டிசம்பர் 31 வரை https://bit.ly/contributetorfh இணையத்தளம் வழியாகத் தொடர்ந்து நிதி வழங்கலாம்.
