சிங்கப்பூரில் பெரிய குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் புதிய திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட 5,000 சிங்கப்பூர்ப் பிள்ளைகள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதிக்குப்பின் மூன்றாவது பிள்ளை அல்லது அதற்கும் அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் பெரிய குடும்பங்களுக்கு $16,000 வரை கூடுதல் அனுகூலங்கள் வழங்கப்படும் என்று 2025ன் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
திட்டம் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டாகியுள்ள நிலையில், மார்ச் மாத நிலவரப்படி கிட்டத்தட்ட 5,000 பிள்ளைகள், பிள்ளை மேம்பாட்டுக் கணக்குத் தொடக்க மானியத்தைப் பெற்றனர்.
அவர்களின் அன்னையர் பெரிய குடும்பங்களுக்கான மெடிசேவ் மானியத்தையும் பெற்றதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
மூன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான செலவினங்களைச் சமாளிக்க பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் $10,000 நிரப்புதொகையும் தாயின் மெடிசேவ் கணக்கில் $5,000 நிரப்புதொகையும் வழங்கப்படுகின்றன.
கருவுற்றிருக்கும் காலம், பேறுகாலம் தொடர்பான செலவினங்களைச் சமாளிக்க மெடிசேவ் நிதியில் வழங்கப்படும் நிரப்புதொகையைத் தாய்மார் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பெரிய குடும்பங்களுக்கான லைஃப்எஸ்ஜி திட்டம்மூலம் ஒரு வயதிலிருந்து ஆறு வயது எட்டும்வரை மூன்றாவது அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் $1,000 சிறப்புத்தொகை வழங்கப்படும்.
பெரிய குடும்பங்களுக்கான லைஃப்எஸ்ஜி சிறப்புத்தொகையை 33,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கடந்த ஆண்டு பெற்றுகொண்டதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பலசரக்கு, பயனீட்டுக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் ஆகியவற்றுக்குப் பெற்றோரால் அந்தச் சிறப்புத்தொகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சிங்கப்பூர் குடிமக்களின் ஒட்டுமொத்த கருவள விகிதம் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 0.87க்குச் சரிந்தது.
பெரும்பாலான தம்பதிகள் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை மட்டும் பெற்றுக்கொள்ள விரும்புவதாக மக்கள்தொகை விவகாரங்களை ஆராயும் வல்லுநர்கள் கூறினர்.
2024ஆம் ஆண்டு, 40 வயதிலிருந்து 49 வயதுக்கு இடைப்பட்ட சிங்கப்பூர்ப் பெண்கள் கிட்டத்தட்ட 20.6 விழுக்காட்டினர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டனர். 2004ஆம் ஆண்டு அது 34.5 விழுக்காடாகவும் 2014ஆம் ஆண்டு 26.3 விழுக்காடாகவும் இருந்தது.
மாறாக, ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2004ஆம் ஆண்டு 15.9 விழுக்காடாக இருந்த எண்ணிக்கை 2014ல் 19.8 விழுக்காடாகவும் 2024ல் 22.8 விழுக்காடாகவும் அதிகரித்தது.

