ஒரே நேரத்தில் 50,000 மோசடி அழைப்புகள்; கருவிகளைப் பொருத்திய மலேசிய ஆடவருக்குச் சிறை

ஒரே நேரத்தில் 50,000 மோசடி அழைப்புகள்; கருவிகளைப் பொருத்திய மலேசிய ஆடவருக்குச் சிறை

2 mins read
bc751a55-0e8f-4c58-8fe1-e16c65d625c8
கிட்டத்தட்ட நான்கு முறை சிங்கப்பூருக்குள் நுழைந்த 42 வயது சொங் வெய் ஹாவ் என்ற மலேசிய ஆடவர், ஒன்பது தொலைத்தொடர்புக் கருவிகளை வாடகைக்கு எடுத்த வீட்டில் பொருத்தினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூருக்குள் நுழைந்து மோசடிகளைச் செயல்படுத்த தொலைத்தொடர்புக் கருவிகளைப் பொருத்திய மலேசிய ஆடவருக்கு ஐந்தாண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனையும் $895 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட நான்கு முறை சிங்கப்பூருக்குள் நுழைந்த 42 வயது சொங் வெய் ஹாவ் என்ற மலேசிய ஆடவர், ஒன்பது தொலைத்தொடர்புக் கருவிகளை வாடகைக்கு எடுத்த வீட்டில் பொருத்தினார்.

அந்தக் கருவிகள் மூலம் 18,000க்கும் அதிகமான தொலைபேசி எண்களுக்கு 50,000க்கும் அதிகமான அழைப்புகள் வந்தன. அதன் மூலம் $1.6 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பாதிக்கப்பட்டோர் இழந்தனர்.

மின்னியல் வல்லுநராகக் கிட்டத்தட்ட 15 ஆண்டு அனுபவம் உள்ள சொங், மோசடியில் ஈடுபட்டதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெலிகிராம் செயலியில் வேலைவாய்ப்பைச் சொங் தேடினார். அதில் மாதம் 3,000 ரிங்கிட் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றை சொங் கண்டார்.

அதையடுத்து டெலிகிராம் செயலி மூலம் ‘நாஸா’ என்பவரிடம் சொங் பேசியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

சிங்கப்பூரில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்தால் $700 டாலர் மதிப்புள்ள மின்னிலக்க நாணயங்கள் வழங்கப்படும் என்று சொங்கிடம் நாஸா கூறினார்.

நாஸாவுக்காக வேலை செய்ய சம்மதித்த சொங், சிங்கப்பூருக்குள் கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி நுழைந்து வாடகை வீட்டைத் தேடினார்.

தாம் கண்டுபிடித்த வாடகை வீட்டில் அதிவேக இணையச் சேவையைப் பொருத்தும்படி வீட்டு உரிமையாளரிடம் சொங் தெரிவித்தார். வீட்டு உரிமையாளரிடம் தான் டிம் சம் கடையில் நிர்வாகியாக வேலை செய்வதாகவும் கடையில் உள்ள பெண் ஊழியர்கள் வீட்டில் தங்குவர் என்றும் பொய் சொன்னார்.

பின் நான்கு நாள் கழித்து ஆறு மாதத்துக்கு $18,000ஐச் செலுத்தி வாடகை வீட்டைப் பயன்படுத்தத் தொடங்கினார். பின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொங் தொலைத்தொடர்புக் கருவிகளை வீட்டில் பொருத்தினார்.

ஒரே நேரத்தில் உள்ளூர் எண்ணிலிருந்து பல தொலைபேசிகளுக்கு அழைப்புகள் சென்றன. மொத்தம் 131 தொலைபேசி எண்கள் வாடகை வீட்டிலிருந்து சென்றபின் கண்டறியப்பட்டது. மோசடி தொடர்பில் அளிக்கப்பட்ட 75 புகார்களிலும் வாடகை வீடு பதிவானது.

சொங் மேலும் 20 கருவிகளைப் பொருத்தவிருப்பதற்குமுன் வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் வாடகை வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சோதனை நடத்தினர். சொங் அப்போது வீட்டில் இல்லை.

பின் ஜூன் 28ஆம் தேதி சொங் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டார். இரண்டு நாள்கள் கழித்து மலேசிய அதிகாரிகள் சொங்கைச் சிங்கப்பூர்க் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

குறிப்புச் சொற்கள்