500 சதுர மீட்டர் பரப்பளவில் நீர் விளையாட்டு இடம்

500 சதுர மீட்டர் பரப்பளவில் நீர் விளையாட்டு இடம்

1 mins read
14d90980-eadf-485c-a357-db287d443137
ஜேக்கப் பாலாஸ் குழந்தைகள் நீர் விளையாட்டு இடம் புதிய அம்சங்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. - படம்: தேசிய பூங்காக் கழகம்

ஜேக்கப் பாலாஸ் குழந்தைகள் தோட்டத்தில் உள்ள நீர் விளையாட்டு இடம் புதுப் பொலிவுடன் பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.

புதிய வசதிகளுடன் இடமும் விரிவாக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் புதிய அம்சங்களுடன் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம்.

சிங்கப்பூர் பூமலையில் இடம்பெற்றுள்ள அந்த நீர்விளையாட்டு இடம், 2019ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதுப்பிப்புக்காக மூடப்பட்டது. இதையடுத்து 2023 நவம்பரில் அங்கு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.

தற்போது அது, முன்பைவிட 500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பெரிதாக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை வாயிலாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

நீர் சைக்கிள், அதன் தொடர்பான ‘மிஸ்ட் ஸோன்ஸ்’, ‘வேடிங் பூல்ஸ்’, ‘வாட்டர் ஜெட்ஸ்’ உள்ளிட்ட விளையாட்டுகளிலும் குழந்தைகள் பங்கேற்க முடியும்.

குடை நீர்வீழ்ச்சி, உயரமான இடத்திலிருந்து நீர் வழிந்தோடுவது, ஸ்பிளாஷ் பக்கெட் சிமுலேட் ரெய்ன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நீர் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒளி, ஒலி வழிகாட்டியுடன் சுற்றுச்சூழலில் எவ்வாறு நீர் வழிந்து செல்கிறது என்பதை குழந்தைகள் விளையாடிக் கற்றுக்கொள்ளலாம்.

வருகையாளர்கள் இடத்தைப் பாதுகாப்பாகவும் வறண்ட இடமாகவும் வைத்திருக்க கால்வாய் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாற்றங்களாக கூடுதலான இருக்கைகள், கழுவும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள நீர் விளையாட்டு, இரண்டு முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்றது, அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்
சுற்றுச்சூழல்விளையாட்டுகுழந்தைகள்