தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக அதிகமானோர்க்கு கலைகளின் புரவலர் விருதுகள்

3 mins read
650b7b1e-dedd-4de3-adfb-7852facf8a3e
‘கலைகளின் தோழன்’ விருதைப் பெற்ற உள்ளூர் நாடகத் தயாரிப்பாளரும் இயக்குநருமான யாசிர். - படம்: தேசிய கலைகள் மன்றம்

கலைகளை மேம்படுத்த ஒவ்வோராண்டும் வழங்கப்படும் கலைகளின் புரவலர்களுக்கான விருதுகளில், இவ்வாண்டுக்கான ‘கலைகளின் தோழன்’ விருதைப் பெற்றுள்ளார் உள்ளூர் நாடகத் தயாரிப்பாளரும் இயக்குநருமான யாசிர், 41.

ஏறத்தாழ 20 ஆண்டுகளாகக் கலைத் துறையில் பணியாற்றிவரும் இவர், மனநலிவு நோயால் (டௌன் சிண்ட்ரோம்) பாதிக்கப்பட்டோரின் நாடகம் ‘SEEDS Here. Not Here’க்கான முன்னோட்டக் காணொளிகளைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

‘மாயா டான்ஸ் தியேட்டர்’ அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர், இவ்வாண்டு அவர்களது சிறப்புக் குழுவான (Diverse Abilities Dance Collective (DADC) மாறுபட்ட திறன்கள் கொண்டோர் நடனக் குழுவின் படைப்புக்கு, தனது நிபுணத்துவத்தைப் பங்களித்ததற்காக ‘கலைகளின் தோழன்’ விருதினை வென்றுள்ளார்.

“இது போன்ற சிறப்புத் திறன்களுடையோருடன் பணியாற்றும் அனுபவம் கிடைத்ததே விருது போன்றதுதான். அதற்காக இவ்விருது கிடைத்துள்ளது மேலும் சிறப்பான உணர்வை அளிக்கிறது,” என்றார் திரு யாசிர்.

“சிங்கப்பூர் போன்ற பல்லினச் சமூகத்தின் தனித்துவத்தைப் பேணுவதற்கும் பறைசாற்றுவதற்கும் கலைகள் தழைப்பது அவசியம். ஒரு கலைஞனாக அதற்கான ஆதரவின் அவசியத்தை நான் நன்கு அறிவேன்,” என்று சொன்ன யாசிர், இதுபோல் பலர் முன்வந்து பல வகையில் ஆதரவளிப்பது வரவேற்கத்தக்கது என்றும் சொன்னார்.

தொடர்ந்து எதிர்காலத்தில் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், சிங்கப்பூரின் அடையாளத்தைப் பறைசாற்றும் படைப்புகளுக்குப் பங்களிக்க விருப்பமுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கலைப் புரவலர்களை விருந்தளித்து கெளரவித்த தேசியக் கலைகள் மன்றம்

தேசியக் கலைகள் மன்றம் கலைகளின் புரவலர்களை ஊக்குவிக்கும் வண்ணம் கடந்த ஆண்டு 50.2 மில்லியன் வெள்ளி பங்களிப்பைச் செய்த தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளது.

கலைகள் மேம்பாட்டிற்காக கடந்த ஆண்டு மட்டும் 389 தனிநபர்களும் 117 நிறுவனங்களும் பங்களித்துள்ளன. இந்த விருதுகள் தொடங்கிய 1983ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆக அதிகமானோர் பங்களித்துள்ளது இதுவே முதல் முறை.

குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டின் பங்களிப்பான 32.1 மில்லியன் வெள்ளியை விட இது 56 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைகளின் புரவலர்களுக்கான 41ஆம் ஆண்டு விருத்தளிப்பு விழா பான் பசிபிக் ஆர்ச்சர்ட் ஹோட்டல் உள்ளரங்கில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும், சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சிங்கப்பூரில் கலைகள் செழித்து துடிப்புடன் இருப்பதாகப் பேசிய அமைச்சர் எட்வின் டோங், கலைகளை வளர்க்க அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் இணைந்து செயல்படுவதாகச் சொன்னார். தொடந்து கலைஞர்கள், அமைப்புகள், புரவலர்களுடன் இணைந்து செயல்படுத்திய திட்டங்கள் சிலவற்றை அவர் பட்டியலிட்டார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 13,000 கலை நிகழ்வுகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உள்ளூர் கலைஞர்கள் அனைத்துலக அரங்கில் புகழ்பெற்று வருவதையும் பாராட்டினார்.

ஆக்கபூர்வமான பொருளாதாரத்திற்கு பங்களிப்பது, ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்குவது, சிங்கப்பூரைத் தனித்துவமான நகரமாகக் கட்டமைப்பது உள்ளிட்டவறை நோக்கி முன்னேறுவதைச் சுட்டிய அமைச்சர், அவற்றை நிறைவேற்ற, நிதியுதவி, பார்வையாளர்களின் ஆர்வ மேம்பாடு, கலைப் படைப்புகளுக்கான இடங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.

அவற்றுக்கான புதிய உத்திகளையும் வழிகளையும் தொடர்ந்து உருவாக்க முயன்று வருவதாகவும் சொன்னார். புரவலர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவர்களின் பங்களிப்புகள் எதிர்கால தலைமுறைக் கலைஞர்களுக்கு நல்ல பாதையை வகுக்கும் என்றும் சொன்னார்.

இவ்வாண்டு 22வது முறையாக யூஓபி வங்கி மதிப்புக்குரிய கலைகளின் புரவலர் (பெருநிறுவனம்) சிறப்பு விருதை பெற்றது.

இவ்வாண்டு 3 நிறுவனங்களுக்கும் 33 தனிநபர்களுக்கும் ‘மதிப்புக்குரிய கலைகளின் புரவலர்’ விருது வழங்கப்பட்டது. 15 நிறுவனங்களுக்கும் 37 தனி நபர்களுக்கும் கலைகளின் புரவலர் விருது வழங்கப்பட்டது.

மேலும், 99 நிறுவனங்களுக்கும், 318 தனி நபர்களுக்கும் ‘கலைகளின் தோழர்’ விருது வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்