வர்த்தக முத்திரை தொடர்பான இழப்பீடுகளை எவ்வாறு கணக்கிடுவது என்பதை நாட்டின் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதை அடுத்து, போலி சொகுசுப் பொருள்களைத் தொடர்ந்து விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிங்கப்பூர் இன்ஸ்டகிராம் விற்பனையாளர், லுவி விட்டோனுக்கு அரை மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று (மே 6) அளிக்கப்பட்ட தீர்ப்பில், லுவி விட்டோனின் சின்னங்களை திரு இங் ஹோ செங் வெளிப்படையாகப் பயன்படுத்தி வர்த்தக முத்திரை தொடர்பான விதிமுறைகளை மீறியதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, பிரெஞ்சு சொகுசு நிறுவனமான லுவி விட்டோனுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை $200,000லிருந்து $510,000 ஆக இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.
இன்ஸ்டகிராமில் ‘emcase_sg’, ‘emcrafts_sg’ என்ற பெயர்களில் இணையம் மூலம் வர்த்தகம் செய்தார் இங்.

