53 மில்லியன் வெள்ளி மோசடி: தப்பியோடிய கும்பலின் மற்றொரு உறுப்பினர் கைது

53 மில்லியன் வெள்ளி மோசடி: தப்பியோடிய கும்பலின் மற்றொரு உறுப்பினர் கைது

2 mins read
1bb65e7c-a7b2-46df-86ae-0b62b1864b21
கம்போடியாவில் மே 4ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்ட நியாம் சியாவ் ஜூய். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

கம்போடியாவின் நோம் பென் நகரை மையமாகக் கொண்டு, எல்லை தாண்டிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட மோசடிக் கும்பலைச் சேர்ந்த 30 வயது நியாம் சியாவ் ஜூய் கைது செய்யப்பட்டார்.

கம்போடியாவில் மே 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார்.

அவர்மீது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை (மே 6) குற்றம் சாட்டப்பட்டது. சிங்கப்பூரர்களைக் குறிவைத்து ஏமாற்றிய மோசடி அழைப்பு நிலையத்தில் அவர் அழைப்பாளராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது.

விசாரணைகளுக்காக அவர் மேலும் ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்றும் அப்போது ஆதாரங்களை மீட்பதற்காக நடத்தப்படும் சோதனைக்கு அவரும் அழைத்துச் செல்லப்படலாம் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சியாவ் சம்பந்தப்பட்ட மோசடிக் கும்பலுக்குக் குறைந்தது 535 மோசடி வழக்குகளில் தொடர்பிருப்பதாகவும் அதன் மூலம் கிட்டத்தட்ட 53 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

இரு சிங்கப்பூர் சகோதரர்களால் அந்த மோசடிக் கும்பல் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சியாவுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, சிங்கப்பூர் காவல் துறையும் கம்போடிய அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையின்போது அந்த மோசடிக் கும்பலின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.

அந்தக் கும்பலுடன் தொடர்பிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் 15 பேர்மீது கடந்த ஆண்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அக்கூட்டத்தின் மூலையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் இங் வெய் லியாங் என்பவரின் சகோதரர் இங் வெய் காங் (33), அவரின் காதலி கிறிஸ்டி நியோ வெய் என் (29), உறவினர் லெஸ்டர் எங் ஜிங் ஹாய் (29) உள்ளிட்டோர் அதில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்