சிங்கப்பூரின் உதவியால் 55.4 கிலோ காண்டாமிருகக் கொம்புகள் பறிமுதல்

2 mins read
ec873aae-b5c7-4ffc-a378-77def951599f
நான்கு பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55.4 கிலோகிராம் காண்டாமிருகக் கொம்புகள். - படம்: தென்னாப்பிரிக்கக் காவல்துறை
multi-img1 of 2

தென்னாப்பிரிக்க அதிகாரிகளுடன் இணைந்து சிங்கப்பூரின் தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் செயல்பட்டதில் 55.4 கிலோகிராம் காண்டாமிருகக் கொம்புகள் பிடிபட்டன.

மேலும் 26.2 கிலோகிராம் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் உடற்பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்க நடவடிக்கையின்போது இரண்டு நைஜீரிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு சரக்கு பொட்டலம் கண்டறியப்பட்டது.

அது தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக லாவோசுக்குக் கொண்டு போகவிருந்தது.

அதைச் சோதனை செய்த அதிகாரிகள் பொட்டலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35.7 கிலோ காண்டாமிருகக் கொம்புகளைப் பறிமுதல் செய்து கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

மேலும் நான்கு சரக்குக் கப்பல் ஏற்றுமதிகளில் விலங்குகளின் எலும்புகள், பற்கள், நகங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை கிட்டத்தட்ட 150 கிலோ எடையிருந்தன.

இந்நிலையில், நவம்பர் 11ஆம் தேதியும் சாங்கி விமான நிலையத்தில் ஒரு சரக்கு பொட்டலம் கண்டறியப்பட்டது.

அதுவும் முந்தைய பொட்டலம் போலத் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக லாவோசுக்குக் கொண்டு போகவிருந்தது.

இம்முறை தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் கடத்தல் பொருள்களைப் பறிமுதல் செய்யாமல் தென்னாப்பிரிக்கக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

மேலும் அந்தப் பொட்டலங்களை விசாரணைக்காகத் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பி அனுப்பினர்.

பொட்டலங்களைப் பெற்ற தென்னாப்பிரிக்க அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். டிசம்பர் 1ஆம் தேதி அவர்கள் ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினர்.

அப்போது நான்கு பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55.4 கிலோகிராம் காண்டாமிருகக் கொம்புகள், 26.2 கிலோகிராம் எடையில் விலங்குகளின் உடற்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவர்மீதும் தென்னாப்பிரிக்காவில் குற்றஞ்‌‌‌சாட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்