அரசதந்திரத்தில் 55 ஆண்டுகள்: ஓய்வு பெறுகிறார் டாமி கோ

அரசதந்திரத்தில் 55 ஆண்டுகள்: ஓய்வு பெறுகிறார் டாமி கோ

2 mins read
8b1bd79d-0d11-4c3c-87fa-91c2e333e6f8
பேராசிரியர் டாமி கோ. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பொதுத் தூதரான பேராசிரியர் டாமி கோ, 88, வரும் ஆகஸ்ட் மாத இறுதியுடன் வெளியுறவு அமைச்சிலிருந்து பணிஓய்வு பெறுகிறார். 

55 ஆண்டுகள் நிறைவுசெய்து ஓய்வுபெறும் தகவலை அவர் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7 ) அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.

சிங்கப்பூரின் முதல் வெளியுறவு அமைச்சரான எஸ்.ராஜரத்தினம் முதற்கொண்டு இதுவரை பதவி வகித்த அனைத்து வெளியுறவு அமைச்சர்களின் கீழும் பணியாற்றிய பெருமைக்குரியவர் திரு கோ.

சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு வெளியுறவு அமைச்சு நடத்திய விழாவில், அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தமக்கு ‘மெச்சத்தக்க வாழ்நாள் விருது’ வழங்கிக் கௌரவித்ததையும்  தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார் அவர்.

அன்றைய தினமே வெளியிடப்பட்ட இன்ஸ்டகிராம் பதிவில், பேராசிரியர் கோவுக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவிப்பதில் தாம் பெருமிதம் அடைவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் கோவின் வரலாற்றுச் சாதனைகள் அவர் அடைந்த வெற்றிகளுக்கும் இலக்குகளுக்கும் அப்பாற்பட்டவை என்று பாராட்டிய திரு விவியன், திரு கோவின் அறிவுத்திறன், நேர்மை, பெருந்தன்மை, சிங்கப்பூர் மீதான தளராத அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகள் கடந்தும் வெளியுறவு அமைச்சின் எண்ணற்ற அதிகாரிகளுக்குப் பெரும் ஊக்கமளித்துள்ளன என்றார்.

‘‘திரு கோவின் முன்மாதிரியான வழிகாட்டல், எதிர்காலத்திலும் சிங்கப்பூரின் அரசதந்திரப் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டியாகத் திகழும்,” என்று அமைச்சர் பாராட்டியுள்ளார்.

அடுத்தகட்டப் பயணம்

முழுமையாக ஓய்வெடுக்காமல், செப்டம்பர் 1 முதல் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின்  அனைத்துலக சட்ட நிலையத்தில் தனது பணியைத் தொடரவுள்ளதாகத் திரு கோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதி, அமெரிக்காவிற்கான தூதர், கடல் சட்டத்திற்கான ஐ.நா. மாநாட்டின் தலைவர், ஆசியான் சாசனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு மற்றும் மலேசியாவுடனான பெட்ரா பிராங்கா எல்லைப் பூசலில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனப் பல்வேறு முக்கிய அரசதந்திரப் பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
அரசதந்திர உறவுவெளியுறவு அமைச்சுஓய்வுசிங்கப்பூர்