போக்குவரத்துக் குற்றங்களுக்காக 59 வாகனவோட்டிகளுக்குத் தண்டனை

போக்குவரத்துக் குற்றங்களுக்காக 59 வாகனவோட்டிகளுக்குத் தண்டனை

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Feb 2026 - 12:25 pm

1 mins read

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், அண்மைய விழாக்காலத்தின்போது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் கிட்டத்தட்ட 60 வாகனவோட்டிகள் தண்டிக்கப்பட்டனர்.

இரு வெள்ளைக் கோடுகள் உள்ள சாலைப் பகுதிகளில் வாகனத்தை ஓட்டியது, வரிசையில் நிற்காமல் முந்திச்சென்றது ஆகியவை குற்றச்செயல்களில் அடங்கும்.

பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை நடத்தப்பட்ட தீவிர அமலாக்க நடவடிக்கையின்போது, அவர்கள் பிடிபட்டதாக காவல்துறையும், சோதனைச்சாவடி ஆணையமும் தெரிவித்தன.

குறைந்தது 59 வாகனவோட்டிகள், தவறான திசையில் வாகனத்தைச் செலுத்தியது, இரு வெள்ளைக் கோடுகள் உள்ள சாலைப் பகுதிகளில் வாகனத்தை ஓட்டியது, வரிசையில் நிற்காமல் முந்திச்சென்றது உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் குற்றங்கள் புரிந்ததற்காக, மீண்டும் வரிசையில் சேர்ந்துகொள்ள 48 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் 31 பேர் கூடுதல் நடவடிக்கைக்காகப் போக்குவரத்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெளிநாட்டில் பதிவான குறைந்தது 11 வாகனங்களுக்குச் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மற்ற சாலைப் பயனர்களின் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கும் வாகனவோட்டிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சோதனைச்சாவடிபோக்குவரத்துகுற்றம்உட்லண்ட்ஸ்