கடந்த இரண்டு மாதங்களில் இணையச் சந்தையிடங்களில் மொத்தம் 594 பேர் மோசடிக்காரர்களிடம் $1.3 மில்லியன் இழந்துள்ளனர்.
காவல்துறை ஜூன் 12ஆம் தேதி இந்தத் தகவலைத் தெரிவித்தது.
மோசடிக்காரர்கள், ‘கெரசெல்’, ‘ஃபேஸ்புக் மார்க்கெட் பிளேஸ்’ அல்லது மற்ற தளங்களில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வர்.
அதன் பிறகு, பொருள்களுக்கான விற்பனை விலையை ஏற்றுக்கொண்ட பிறகு, மோசடிக்காரர்கள் சம்பந்தப்பட்ட இணையச் சந்தை இடம் அல்லது விநியோக நிறுவனத்தைப் போல நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறுவர்.
அதன் பிறகு இழந்த பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்குப் போலி கியூஆர் குறியீட்டையோ இணைப்பையோ அனுப்புவர்.
அந்த இணைப்பைச் சொடுக்குவோர் அல்லது கியூஆர் குறியீட்டை வருடுவோர், போலி வங்கி இணையத்தளத்திற்குக் கொண்டுசெல்லப்படுவர்.
அங்கு, வங்கித் தகவல்கள், கடன்பற்று அட்டை விவரங்கள் உள்ளிட்டவை அவர்களிடம் கேட்கப்படும். மோசடிக்காரர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்காக அவை கேட்கப்படுகின்றன என்று நினைத்து அவர்கள் ஏமாற்றப்படுவர் எனக் காவல்துறை கூறினர்.
தங்களின் வங்கிக் கணக்குகளில் அல்லது வங்கி அட்டைகளில் அனுமதியற்ற பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தபோது மட்டுமே தாங்கள் ஏமாந்திருப்பதை அவர்கள் அறிந்துகொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு, 46, 563 மோசடிச் சம்பவங்கள் குறித்து புகார் செய்யப்பட்டன. 2023ல், சிங்கப்பூரில் மோசடிக்காரர்களிடம் ஏமாந்தவர்கள் மொத்தம் $651.8 மில்லியன் இழந்தனர்.