தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்த வருமானக் குடும்பக் குழந்தைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க $5 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
eae3caeb-bea5-4386-99cc-8a954a793e3a
‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளியின் 6,400 மாணவர்கள் இந்த அறநிதி மூலம் பயன்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்

என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பசின் (என்சிஎஃப்) நன்கொடைப் பிரிவான ‘பிரைட் ஹொரைசன்ஸ்’ அறநிதி, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கான நிதி ஆதரவை உயர்த்தவிருக்கிறது.

இதன் மூலம் பயன்பெறும் 7,000 பிள்ளைகளுக்காக ஆண்டுக்குக் கூடுதலாக $2 மில்லியன் தொகையை அது வழங்கவிருக்கிறது.

தற்போது அது ஆண்டுக்கு $3 மில்லியனை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகை ஆண்டுக்கு $5 மில்லியனாக உயர்த்தப்படும்.

‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கு நான்கு பிரிவுகளில் ஆதரவு வழங்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும். நிதி ஆதரவு, கற்றல், மேம்பாட்டுக்கான ஆதரவு, சுகாதாரம், நல்வாழ்வுக்கான ஆதரவு, சமூக ஆதரவு ஆகியவை அந்தப் பிரிவுகள்.

‘பிரைட் ஹொரைசன்ஸ்’ அறநிதி இந்த நான்கு பிரிவுகளின்கீழ் வழங்கும் ஆதரவு குறைந்த வருமானக் குடும்பங்கள் முழுமையான ஆதரவைப் பெற மிகவும் முக்கியம் என்று தற்காப்பு மூத்த துணையமைச்சரும் அறநிதியின் தலைவருமான திரு ஹெங் சீ ஹாவ் கூறினார். பாலர் பள்ளிக் கட்டணத்தை மட்டும் குறைப்பதைவிட இத்தகைய முழுமையான ஆதரவு முக்கியம் என்றார் அவர்.

“முதலில் பள்ளியில் சேர்வதற்கான தடையை அகற்றுவோம். கட்டணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. அதற்கடுத்து தொழில்முறை, தொழில்நுட்ப ஆதரவு,” என்றார் அவர்.

குறைந்த வருமானக் குடும்பங்களின் நம்பிக்கை, சமூகத் திறன்களை மேம்படுத்துவதும் பிள்ளைகளின் நலனுக்காக அந்தக் குடும்பங்களுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்துவதும் முக்கியம் என்றார் திரு ஹெங்.

நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உண்மையில் நன்மையளிப்பதையும் அவற்றின் மூலம் தங்கள் பிள்ளைகளிடம் மேம்பாட்டையும் காணும்போது குடும்பத்தினர் நம்பிக்கை பெறுவார்கள் என்றார் அவர்.

‘பிரைட் ஹொரைசன்ஸ்’ அறநிதி, 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் மூலம் பள்ளிக் கட்டணத்துக்கான மானியம், பள்ளிச் சீருடை, கற்றல் பயணம், பாலர் பள்ளி இரண்டாம் ஆண்டு நிறைவுக்கான செலவுகளை ஈடுகட்ட நிதியாதரவு வழங்கப்படுகிறது.

அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை பிள்ளைகளின் கற்றல், மேம்பாட்டுகான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.

முன்னர் மாதாந்தரக் குடும்ப வருமானம் $4,500க்குக்கீழ் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உதவி வழங்கப்பட்டது.

அந்த வரம்பு $6,000ஆக உயர்த்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜனவரியிலிருந்து கூடுதலாக 800 பிள்ளைகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த அறநிதியின் மூலம் பயனடைந்ததாக என்சிஎஃப் கூறியது.

தற்போது அந்த அறநிதி, ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 6,400 பிள்ளைகளுக்கு ஆதரவு வழங்குகிறது. இது அப்பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு ஆகும்.

அடுத்த ஆண்டு முதல் 7,000 பிள்ளைகளுக்கு ஆதரவு வழங்க என்எஃப்சி இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்