தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிபிஎஸ் சேவைகளின் 6½ மணிநேரத் தடங்கலுக்கு மனித தவறு காரணம்

1 mins read
03a0dc82-b010-4b41-b234-439d4480154d
மே 5ம் தேதி டிபிஎஸ் வங்கிச் சேவைகளில் ஏற்பட்ட ஆறரை மணிநேரத் தடங்கலுக்கு மனிதன் செய்த தவறே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: தி பிசினஸ் டைம்ஸ்

மே 5ஆம் தேதி டிபிஎஸ் வங்கிச் சேவைகளில் ஏற்பட்ட ஆறரை மணிநேரத் தடங்கலுக்கு மனிதத் தவறே காரணம் என்றும், முன்னதாக மார்ச் மாதம் ஏற்பட்ட பத்து மணிநேரத் தடங்கலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விவரித்தார். 

வங்கிகளின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த என்ன செய்யப்படுகிறது என்பது பற்றி ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வூ மெங் எழுப்பிய கேள்விக்குத் திரு தர்மன் எழுத்துபூர்வ பதில் அளித்தார். 

இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக மே 5ஆம் தேதி ஏற்பட்ட தடங்கல் ஏற்கப்பட முடியாதது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தது. 

ஆணையத்தின் தலைவரான திரு தர்மன், செயலியக்கப் பராமரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நிரலின் குறிமுறையாக்கத்தில் மனிதன் செய்த பிழையே தடங்கலுக்குக் காரணமென்று வங்கியின் முன்னோட்ட விசாரணைகள் காட்டுவதாகத் தெரிவித்தார். 

“இந்தப் பிழையால் செயலியக்கத்தின் கொள்ளளவு வெகுவாகக் குறைந்தது. அதனால், இணைய, கைப்பேசி வங்கிச் சேவைகளையும், மின்கட்டணங்களையும், ஏடிஎம் இயந்திரப் பரிவர்த்தனைகளையும் கையாளக்கூடிய ஆற்றல் பாதிப்படைந்தது,” என்று திரு தர்மன் கூறினார். 

முன்னதாக மார்ச் மாதம் ஏற்பட்ட தடங்கலுக்கு மென்பொருள் கிருமிகளே காரணம் என்றும் திரு தர்மன் தெரிவித்தார். 

மறுஆய்வு முடிவடைந்தவுடன் தடங்கல்களின் மேல்விவரங்களை வங்கி வெளியிடும். 

மே 5ஆம் தேதி ஏற்பட்ட தடங்கலுக்கு மறுநாள், வங்கிக்கு ஆணையம் கூடுதல் மூலதன நிபந்தனை விதித்தது. 

குறிப்புச் சொற்கள்