தஞ்சோங் பகார் அருகில் உள்ள நீர்ப்பகுதியில் செப்டம்பர் 6ஆம் தேதி 6.3 மீட்டர் நீளமுள்ள ‘பலீன்’ திமிங்கிலத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
என்யுஎஸ் லீ கோங் சியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) வெளியிட்ட ஓர் அறிக்கையில் இதை அறிவித்தது. திமிங்கிலம் மடிந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அது கூறியது.
திமிங்கிலத்தின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது என்றும் அந்த விலங்கு குறித்து மேலும் ஆராய்வதற்காக ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றும் அருங்காட்சியகத்தின் பாலூட்டிகள் பிரிவின் பொறுப்பாளர் மார்கஸ் சுவா தெரிவித்தார்.
அருங்காட்சியகத்தின்படி, இறந்த திமிங்கிலத்தின் எடை ஏறத்தாழ ஆறு டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதி உடல் இல்லாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தத் திமிங்கிலம் பற்றி அருங்காட்சியக ஆய்வாளர்களுக்கு தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் தகவல் அளித்திருந்தனர். இந்தத் திமிங்கிலம் உயிரோடு இருந்திருந்தால், இதன் நீளம் 9 முதல் 12 மீட்டர் வரை இருந்திருக்கும் என்று அருங்காட்சியகத்தின் அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
திமிங்கிலத்தின் வயதும் பாலினமும் இன்னும் கண்டறியப்படவில்லை. எதிர்கால மரபணு பகுப்பாய்வுக்காக திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.