பூமாலை விற்பனை குறித்து தவறான வரித் தகவல்களைத் தெரிவித்த இரவு விடுதிகளுக்குச் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் $6.8 மில்லியனுக்கும் அதிகமான வரியையும் அபராதத்தையும் விதித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுமுதல், அத்தகைய எட்டு இரவு விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
வணிகங்கள் தங்களின் வரிப் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இரவு விடுதிகளில் பூமாலை விற்பனைக்கான வரித் தாக்கல் குறித்த அறிக்கையை ஆணையம் ஜூலை 3ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
பூமாலை விற்பனை மூலம் வரும் வருவாயைக் கணக்குக் காட்டுவதில் சில இரவு விடுதிகள் ‘புத்தாக்கமான’ வழிகளைக் கையாள முயன்றதாக ஆணையம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.
அந்தப் பூமாலைகள் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டு, அவர்களின் பாராட்டைத் தெரிவிக்கும் வகையில் இரவு விடுதியில் உள்ள கலைஞர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பூமாலைக்கும் பெறப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை அந்தக் கலைஞர் வழக்கமாகப் பெறுகிறார்.
பூமாலை விற்பனை என்பது வரி விதிக்கப்படவேண்டிய ஒன்று என்றும் இரவு விடுதியால் வைத்துக்கொள்ளப்படும் பகுதிக்கு மட்டுமன்றி, பூமாலை விற்பனையின் முழுத் தொகைக்கும் பொருள் சேவை வரி பொருந்தும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
வரித் தாக்கல் துல்லியமாகச் செய்யப்படுவதை உறுதிசெய்ய, அனைத்துத் தொழில்துறைகளிலும் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் வழக்கமான வரித் தணிக்கைகளை நடத்தி வருவதாக அது கூறியது.
ஆணையம் கோரிக்கை விடுத்தால், வர்த்தகங்கள் தங்களின் வரித் தாக்கல் முழுமையாகவும் துல்லியமாகவும் செய்யப்படுவதை உறுதிசெய்ய, தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
முறையான பதிவுகளை வைத்திருக்காதோர் அல்லது தங்களின் வரிக் கணக்குகளைக் குறைவாகக் காட்டுவோர், அபராதம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.

