கேவனா சாலை சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் வீடு ஒன்றில் புதன்கிழமை (மார்ச் 19) ஏறத்தாழ 6.9 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 26 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருளின் மதிப்பு $184,000க்குமேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு ஏறக்குறைய 1,040 போதைப்புழங்கிகள் உட்கொள்வதற்கு இவை போதுமானவை. மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட செய்தி அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.
அதிகாரிகளை வீட்டுக்குள் அனுமதிக்க அந்த ஆடவர் மறுத்ததால், சோதனை நடத்த அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்ததாக சிஎன்பி தெரிவித்தது. பின்னர் அந்த ஆடவர் படுக்கை அறையில் கைது செய்யப்பட்டார்.
படுக்கை அறையில் ஏறத்தாழ 6.9 கிலோகிராம் கஞ்சா, 69 கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்), 21 கிராம் கெட்டமின், 20 கிராம் எக்ஸ்டசி போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அந்த ஆடவரிடம் சிறிய அளவில் கஞ்சா, கெட்டமின் போதைப்பொருளும் $6,229.50 ரொக்கமும் சிறிய அளவில் வெளிநாட்டு நாணயமும் இருந்தன.
குடியிருப்பு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த அவரது காரில் மேலும் 25 கிராம் கஞ்சா, 25 கிராம் போதைக் காளான்கள், 17 கிராம் ஐஸ், சிறிய அளவில் கெட்டமின் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்த ஆடவரிடம் விசாரணை தொடர்கிறது. 500 கிராமுக்குமேல் கஞ்சாவைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
கஞ்சாவுக்கு இன்னமும் தேவை இருப்பதை இச்சம்பவம் காட்டுவதாக சிஎன்பியின் கொள்கை, நிர்வாகப் பிரிவுத் துணை இயக்குநர் சங் செர்ன் ஹோங் கூறினார்.

