சிங்கப்பூரர் ஒருவர் மீதும் சீனாவைச் சேர்ந்த ஐவர் மீதும் இங்குச் சட்டவிரோத இணைய நடவடிக்கைகள் மேற்கொண்ட சந்தேகத்தின்பேரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த ஆறு ஆடவர்களும் 32 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
அவர்களிடமிருந்து $543,600க்கு அதிகமான ரொக்கமும் 850,000 அமெரிக்க டாலர் (S$1.1 மில்லியன்) பெறுமான மின்னிலக்க நாணயமும் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறையும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் (ஐஎஸ்டி) கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
சிங்கப்பூர் காவல்துறையின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு, காவல்துறைப் புலனாய்வுப் பிரிவு, சிறப்புச் செயல்பாட்டுத் தளபத்தியம், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஏறக்குறைய 160 அதிகாரிகள் செப்டம்பர் 9ஆம் தேதி தீவு முழுதும் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அந்தச் சோதனை நடவடிக்கைகளில் ஆறு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் தீங்கு விளைவிக்கும் இணைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உலகளவிலான கும்பலுடன் தொடர்புடையர்கள் என்று நம்பப்படுகிறது.
பிடாடாரி பார்க் டிரைவில் சீனாவைச் சேர்ந்த 42 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். பிரபல ஊடுருவல் குழுக்கள் பயன்படுத்தும் இணையச் சேவை வழங்கிகளைப் பெறுவதற்கான ஆவணங்களைக் கொண்ட மடிக்கணினி அவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த மேலும் மூவர் மவுண்ட் சினாய் அவென்யூவில் உள்ள தரை வீடு ஒன்றில் கைதுசெய்யப்பட்டனர்.
அதோடு, சீனாவைச் சேர்ந்த 38 வயது ஆடவர் ஒருவர் கேர்ன்ஹில் ரோட்டில் உள்ள அவரது கூட்டுரிமை வீட்டில் பிடிபட்டார். 34 வயது சிங்கப்பூரர் ஒருவர் ஹவ்காங்கில் உள்ள அவரது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் கைதானார். சட்டவிரோத இணைய நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்செயல்களுக்கு அவர் உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டத்தின்கீழ் சீனாவைச் சேர்ந்த ஐந்து பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இணையத்தளங்களுக்குள் அனுமதியின்றி நுழைவதன் தொடர்பான குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அந்த சிங்கப்பூர் ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

