லிட்டில் இந்தியா வட்டாரத்துக்கு உட்பட்ட சையது ஆல்வி சாலையில் இருக்கும் இரண்டு கடைவீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் அக்டோபர் 8ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்தது.
84, 85 சையது ஆல்வி சாலை கடைவீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறித்து அதிகாலை 1.30 மணி அளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அந்தக் கடைவீடுகளில் பாகஷாலா சிங்கப்பூர் எனும் சைவ உணவகமும் நீர்ஜா மெகா மார்ட் எனும் மளிகைக் கடையும் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை அடைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இடிபாடுகளுக்கு அடியில் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர்.
தேடுதல் பணிகளில் இரு மோப்ப நாய்களும் ஆளில்லா வானூர்தி ஒன்றும் பயன்படுத்தப்பட்டன.
இடிபாடுகளுக்கு அடியில் யாரும் சிக்கியிருக்கவில்லை என்று உறுதிசெய்யப்பட்டது.
84 சையது ஆல்வி சாலை கடைவீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து ஒருவரை அதிகாரிகள் ஏணியைப் பயன்படுத்தி மீட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
படிக்கட்டுகளை இடிபாடுகள் மறித்துக்கொண்டிருந்ததால் அந்த நபரால் கடைவீட்டிலிருந்து சுயமாக வெளியேற முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடைவீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது வெடிப்புச் சத்தம் கேட்டது என வழிப்போக்கர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வண்டி ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.
கடைவீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் மற்றொருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் நான்கு பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
ஆனால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தமிழ் முரசிடம் பேசிய நீர்ஜா மெகா மார்ட் உரிமையாளர் முன்னா, தங்கள் கடையில் ஏறத்தாழ 30 விழுக்காடு சேதம் அடைந்ததாகத் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது கடையிலிருந்த ஊழியர்கள் மீது கண்ணாடித் துண்டுகள் தெறித்து விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும் வெடிப்புச் சத்தம் காரணமாக மேலாளரின் காதுகளில் வலி ஏற்பட்டதாகவும் சொன்னார்.
இது சற்றும் எதிர்பாராத ஒன்று என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
தற்போது கடையிலிருந்த பணம், கணினி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருள்கள் மட்டும் அகற்றப்பட்டு கடை மூடப்பட்டுள்ளது என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இனிமேல்தான் தெரியவரும் என்றும் சொன்னார்.
சம்பவம் நேர்ந்தபோது நீர்ஜா மெகா மார்ட் மேலாளர் இதயத்துல்லா முகமது சிராஜ்தீன், 37, ஊழியர் விபீஷ்ணன், 28, இருவரும் அங்கிருந்தனர். கடை வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென பேரொலி எழுந்ததாகவும், சில நிமிடங்கள் செய்வதறியாது விக்கித்து நின்றுவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
“கடையின் பின்புறமுள்ள அலுவலக அறை முழுதும் சேதமடைந்து விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவில்லை என்றார் சிராஜ்தீன்.
“இது அதிர்ச்சியளிக்கும் சம்பவம். நான் அப்போது தன கடைக்குள் நுழையலாம் என்றிருந்தேன். யாருக்கும் அதிக பாதிப்பில்லை. எனினும், கடை குறித்தும், உள்ளே உள்ள பொருள்கள் குறித்தும் கவலையாக இருக்கிறது,” என்றார் விபீஷ்ணன்.
இதற்கிடையே, கடைவீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கு எரிவாயு வெடிப்பு காரணம் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட கட்டடங்களையும் அவற்றுக்கு அருகில் உள்ள கட்டடங்களையும் ஆணையத்தின் பொறியாளர்கள் சோதனையிட்டனர்.
அந்த இரண்டு கடைவீடுகளின் பின்பகுதி, முன்பகுதி முகப்பு, படிக்கட்டுகள் ஆகியவை வெடிப்பில் சேதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அருகில் உள்ள மற்ற கட்டடங்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அவை பாதுகாப்பாக இருக்கின்றன என்றும் ஆணையம் கூறியது.
பாதிக்கப்பட்ட இரு கடைவீடுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
“ஆபத்து ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, விரிவான விசாரணை நடத்துவது, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக ஆலோசனை பெற நிபுணத்துவப் பொறியாளர் ஒருவரை நியமிக்க பாதிக்கப்பட்ட கடைவீடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று ஆணையம் தெரிவித்தது.
சம்பவ இடத்துக்கு ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

