உரிமமின்றி கடன் கொடுத்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 25,500 ‘ஸ்கேம்ஷீல்ட்’ புகார்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படுகிறது.
நாடு முழுதும் புதன்கிழமை பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 11 பேரில் அவர்களும் அடங்குவர். அவர்களில் எட்டுப் பேர் ஆண்கள், மூவர் பெண்கள். அந்த 11 பேரும் 18 முதல் 77 வயதுக்குட்பட்டவர்கள்.
மோசடிக் கும்பலில் ஈடுபட்டதாக நம்பப்படுவோரையும் ‘பின்னர் கட்டணம் செலுத்தக்கூடிய’ சிம் கார்டுகளைப் பதிவு செய்து, கும்பலின் சதித்திட்டங்களுக்குப் பயன்படுத்த உதவியதாகச் சந்தேகிக்கப்படும் முறைகேடான கைப்பேசி விற்பனையாளர்களையும் குறிவைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த 11 பேரும் மோசடிக் கும்பலுக்குப் பல்வேறு வழிகளில் உதவியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி, ‘விரைவான பணம்’, ‘எளிதான கடன்கள்’ ஆகியவற்றை வழங்கும் பல குறுந்தகவல் விளம்பரங்களை அனுப்புதல், இந்த நடவடிக்கைகளை எளிதாக்கக் கைப்பேசி எண்களுக்குக் கட்டணத்தை நிரப்புதல் முதலியவை அவற்றுள் சில.
சந்தேக நபர்கள், மோசடி வேலைகளில் ஈடுபட்டதாகவும் உரிமமின்றிக் கடன் கொடுக்கும் பரிவர்த்தனைகளை எளிதாக்க அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பகிர்ந்துகொண்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அதிரடி நடவடிக்கையின்போது $410,000க்கும் அதிகமான ரொக்கம், இரண்டு மடிக்கணினிகள், 22 கைப்பேசிகள், 14 சிம் அட்டைகள், 24 வங்கி அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அக்கும்பலுடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவற்றில் $106,000க்கும் மேல் பணம் இருந்தது. அதேவேளை 25,000 அமெரிக்க டாலருக்கும் மேல் மதிப்புள்ள மின்னிலக்க நாணயங்களும் கைப்பற்றப்பட்டன.
26க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு ஆடவர் மீதும் கடன்கொடுப்போர் சட்டம் 2008ன்கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அவர்களில் ஒருவரிடம் 300க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பிலான கருவிகளும் இருந்தன. அவர் சுகாதார அறிவியல் ஆணையத்தின் விசாரணையில் உதவி வருகிறார்.
எஞ்சிய ஐவர் மீதான விசாரணை தொடர்கிறது.
கடன் கொடுப்போர் சட்டம் 2008ன்கீழ், பணமோசடிக்கு உதவியதாக முதன்முறை குற்றம் புரிவோருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $30,000 முதல் $300,000 வரை அபராதம், அதிகபட்சம் ஆறு பிரம்படிகள் வரை விதிக்கப்படக்கூடும்.


