மோசடி அல்லது மோசடிக்காரர்களுக்கு உதவியது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டச் சந்தேகத்தின் பேரில் 342 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீவு முழுவதும் நடத்தப்பட்ட இரண்டு வார அதிரடிச் சோதனையில் சந்தேகப் பேர்வழிகள் சிக்கினர். அமலாக்க நடவடிக்கை அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதிவரை நடந்தது.
சந்தேகப் பேர்வழிகளில் 114 பேர் பெண்கள், 228 பேர் ஆண்கள். அவர்களின் வயது 15க்கும் 74க்கும் இடைப்பட்டது.
விசாரிக்கப்படும் 342 பேரும் 870க்கும் அதிகமான மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நண்பர்கள்போல் போலியான அடையாளங்கள் கொண்டு ஏமாற்றுவது, முதலீட்டு மோசடி, அரசாங்க அதிகாரிகள்போல் நடித்து ஏமாற்றுவது, வாடகை மோசடி போன்றவற்றால் கிட்டத்தட்ட 6.60 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, உரிமம் இல்லாமல் கடன் சேவை வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது.
அண்மையில், மோசடியில் ஈடுபடுபவர்களுக்கும் அதற்கு உதவுபவர்களுக்கும் பிரம்படி விதிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

