சாகச நடவடிக்கையின்போது மாண்ட மாணவர்; பயிற்றுவிப்பாளருக்குச் சிறை

சாகச நடவடிக்கையின்போது மாண்ட மாணவர்; பயிற்றுவிப்பாளருக்குச் சிறை

1 mins read
d120d8af-45c7-404d-b4d7-1702738c544c
ஆங்கிலோ சீனப் பள்ளியை (தன்னாட்சி) சேர்ந்த மாணவன் ஜெத்ரோ புவா சின் யாங், 2021இல் சாஃப்ரா ஈசூனில் சாகச நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டபோது கீழே விழுந்து உயிர் இழந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆங்கிலோ சீனப் பள்ளியை (தன்னாட்சி) சேர்ந்த 15 வயது மாணவனின் மரணத்தின் தொடர்பில் தொண்டூழியராகப் பணிபுரிந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கவனக்குறைவாகச் செயல்பட்டு ஜெத்ரோ புவா சின் யாங் என்ற அந்த மாணவனுக்குக் கடும் காயங்களை ஏற்படுத்தியதற்கான குற்றச்சாட்டை 23 வயதான முஹம்மது நூருல் ஹகீம் முஹம்மது டின் ஒப்புக்கொண்டார்.

அவர் ஜெத்ரோவின் பாதுகாப்புக் கவசத்தின் கால்பட்டைகளைச் சோதிக்கத் தவறியதாகவும், அதன் காரணமாக அந்தச் சிறுவன் உயரத்திலிருந்து கீழே விழுந்தபோது அவரது காலில் இருந்த கயிறு கழன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி, ஜெத்ரோவும் சக மாணவர்களும் ஈசூனில் உள்ள சாஃப்ரா சாகச விளையாட்டு நிலையத்தில், அவர்களின் பள்ளி ஏற்பாடு செய்த வெளிப்புற நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.

ஹகீம், வெளிப்புற சாகச நடவடிக்கை பயிற்சி நிறுவனமான ‘கேம்லோட்’க்கு ஊதியம் பெறாத தொண்டூழியராகச் செயல்பட்டிருந்தார். அவர் ஜெத்ரோவுக்கும் மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை விளக்கினார்.

அவர் மாணவர்களின் தலைக்கவசங்களும் தோல்வார்களும் சரியாகப் பொருத்தப்பட்டிருந்தனவா என்பதை உறுதிசெய்ய இறுதிச் சோதனைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.

இருப்பினும், ஜெத்ரோவுக்கும் அவருக்கு முன்னர் சென்ற மூன்று மாணவர்களுக்கும் ஹகீம் அவ்வாறு செய்யவில்லை.

கீழே விழுந்த எட்டு நிமிடங்களில் ஜெத்ரோ சுயநினைவை இழந்தார். கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அம்மாணவர் மறுநாள் உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்