ஸெங்ஹுவா இயற்கைப் பூங்காவில் டிசம்பர் மாதம் ஆறு முயல்கள் மீட்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து விலங்குநல அமைப்பு ஒன்று கைவிடப்படும் முயல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அங்கு வசிப்போரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து பன்னி வாண்டர்லேண்ட் (Bunny Wonderland) என்ற தனியார் விலங்குநல அமைப்பு தனது ஃபேஸ்புக் பதிவில் செகார் சாலையில் கைவிடப்பட்ட முயல் ஒன்று புளோக் 468க்கு அருகே இருப்பது குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகக் கூறியது. மேலும் அந்தப் பகுதியில் மற்ற மூன்று கைவிடப்பட்ட முயல்கள் குறித்தும் தனக்கு புகார் வந்ததாக அது தெரிவித்தது. இந்த விலங்குநல அமைப்பை ஃபேஸ்புக்கில் 20,000 பேர் தொடர்புகொள்வதாகக் கூறப்படுகிறது.
இந்த அமைப்பு ஜனவரி 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு வெளியிட்ட தனது ஆகக் கடைசி ஃபேஸ்புக் பதிவில், கைவிடப்பட்ட (ஒன்று வெள்ளை நிறத்தில், மற்றொன்று மாநிறத்திலான) இரண்டு முயல்களை, தான் இன்னமும் தேடி வருவதாகக் குறிப்பிட்டது.
இந்த முயல்களைத் தேடும் பணியில் பல முயல் உரிமையாளர்கள், தொண்டூழியர்கள் வெவ்வேறு நேரங்களில் தேடி வருவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
மற்ற அன்பர்களையும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ள அமைப்பு, முயல்களைத் தேடுவதற்கான உகந்த நேரம் காலை 8.00லிருந்து 10.00 மணிவரை என்றும் மாலை 6.00லிருந்து 10.00 மணிவரை என்றும் விளக்கியுள்ளது. அந்த நேரம்தான் முயல்கள் உணவுக்காக வெளிவரும் என்று அமைப்பு தெளிவுபடுத்தியது.
டிசம்பர் மாதம் தொடங்கி ஸெங்ஹுவா பூங்கா பகுதியில் குறைந்தது ஆறு முயல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைப்பு கூறுகிறது. இதில் ஐந்து முயல்கள் பன்னி வண்டர்லேண்ட் அமைப்பினாலும் மற்றொன்று விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தாலும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“துரதிர்ஷ்டவசமாக இந்தப் பூங்கா வேண்டாத செல்லப் பிராணிகளை விட்டுச் செல்லும் இடமாக மாறிவிட்டதாக,” பன்னி வர்ணடர்லேண்ட் அமைப்பு கூறியுள்ளது.

