வரிச் சலுகை பெற்ற 6 குடும்ப அலுவலகங்கள் $3 பில்லியன் மோசடியில் தொடர்புடையவை: துணைப் பிரதமர் கான்

வரிச் சலுகை பெற்ற 6 குடும்ப அலுவலகங்கள் $3 பில்லியன் மோசடியில் தொடர்புடையவை: துணைப் பிரதமர் கான்

2 mins read
73685baa-7165-40e7-9c80-ade45be64ba1
சிங்கப்பூரில் மூன்றாம் தரப்பு நிதிகளைக் கையாளாத, ஒரே குடும்பத்துக்குச் சொந்தமான குடும்ப அலுவலகங்களைப் பதிவு செய்யத் தேவையில்லை. சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் உரிமமும் அவற்றுக்குத் தேவையில்லை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் வரிச் சலுகை பெற்ற ‘எஸ்எஃப்ஓ’ எனப்படும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமான குடும்ப அலுவலகங்கள் ஆறு, $3 பில்லியன் பணமோசடியில் ஈடுபட்ட 10 பேருடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு வரிச் சலுகை நடைமுறையைக் கடுமையாக்குவதாகக் கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்திருந்தது.

குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வெளிநாட்டினர் 10 பேருடன் தொடர்புடைய எத்தனை அலுவலகங்கள் வரிச் சலுகை பெற்றன என்று நாடாளுமன்ற நியமன உறுப்பினர் உஷா சந்திரதாஸ், பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கை ஜூலை 2ஆம் தேதி கேட்டார்.

பிரதமரின் சார்பில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் எழுத்து மூலம் அளித்த பதிலில், ஆறு ‘எஸ்எஃப்ஓ’ அலுவலகங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குற்றம் செய்தோர் அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைக்குச் சொந்தமான அலுவலகங்களும் அவற்றில் அடங்கும்.

குடும்ப அலுவலகங்கள் என்பவை, ஒரே குடும்பத்தின் சொத்துகள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களின் சொத்துகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் அமைப்புகள்.

மூன்றாம் தரப்பு நிதிகளைக் கையாளாததால் சிங்கப்பூரில் குடும்ப அலுவலகங்களைப் பதிவு செய்யத் தேவையில்லை. சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் உரிமமும் அவற்றுக்குத் தேவையில்லை.

ஆணையம் வழங்கிய வரிச் சலுகைகள் இந்த அலுவலகங்களின் உரிமையாளர் அல்லது அவரது வாழ்க்கைத் துணை மீது குற்றம் சுமத்தப்பட்ட அல்லது நிரூபிக்கப்பட்ட நிதியாண்டின் தொடக்கத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டதாகத் துணைப் பிரதமர் கான் கூறினார். இது நிதியாண்டு 2022ஐக் குறிப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

வரிச் சலுகைக்கான நிபந்தனைகள் மீறப்படவில்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டதற்குமுன் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் மீட்டுக்கொள்ளப்படமாட்டா என்று திரு கான் கூறினார்.

“மேலும், இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, குற்றவாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.

“பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு, குடும்ப அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளைவிட மிக அதிகம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்