சொந்த இலக்குகளை அடைய போலித் திருமணம் செய்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் அறுவர் வியட்னாமைச் சேர்ந்த பெண்கள், எழுவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர்கள். கைதானோர் 22லிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள்.
குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 7) இத்தகவல்களை வெளியிட்டது. குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் சந்தேக நபர்கள் ஒவ்வொருவர் மீதும் ஒன்றிலிருந்து 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கைதான பெண்கள், ங்கோ தி தான், 28, ஹு ஜியா ஃபான், 30, கையன் தி துய் குயன், 30, ட்ரான் கொக் ஃபுவோங் தாவ், 31, கையன் தி மின் ட்ராங், 32, கையன் தி து ஜியாங், 32 ஆகியோர் ஆவர்.
கைதான ஆண்கள், நோவெல் டியோ ஜுன்வெய், 23, கான் ஜுன் வெய், 25, மெல்வின் டான் சூன் காங், 27, லிம் கியென் கியோங், 32, ஜானத்தன் குவெக் ஸி ஹாவ், 32, டியோ வெய் ஜியெ, 27, ஷேவியர் ஆங் குன் தெங், 26, ஆகியோர் ஆவர்.
போலித் திருமணம் செய்துகொள்ள ஆண்களில் நால்வருக்குத் தலா 8,000லிருந்து 18,000 வெள்ளி வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மற்றவர்களில் இருவருக்கும் வெளியிடப்படாத தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவர் போலித் திருமண ஏற்பாடுகளைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புதன்கிழமையன்று (ஜூன் 5) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரே நேரத்தில் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரசாங்க வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
போலித் திருமணம் தொடர்பில் மட்டுமின்றி சிங்கப்பூருக்கு வருவதற்கான அனுமதி அட்டை விண்ணப்பங்களில் சந்தேக நபர்கள் போலியான தகவல்களை வழங்கினரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
போலித் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் ஒன்று குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது. சந்தேக நபர்கள் புரிந்திருக்கக்கூடிய போலித் திருமணம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

