கடந்த 2021 முதல் 2023 வரை சிங்கப்பூரிலுள்ள தற்காலிகத் தங்குமிட வசதிகளிலுள்ள 720 படுக்கைகளில் 60 விழுக்காடு வீடிலில்லாதவர்களால் ஆண்டுதோறும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
தற்காலிகக் குடியிருப்பு ஆதரவு தேவைப்படும் வீடற்றவர்களுக்கும் குடும்பங்களுக்கும் இதுபோன்ற ஏழு தற்காலிகத் தங்குமிடங்கள் உள்ளன. தனிநபர்கள் சராசரியாக கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்குமிடங்களில் தங்குகிறார்கள் என்று சமுதாய குடும்ப மேம்பாட்டுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வீடற்றவர்கள் தற்காலிகக் குடியிருப்பிலிருந்து நிரந்தர குடியிருப்புக்கு மாறுவதற்கு உதவத் திட்டங்கள் உள்ளனவா என்று அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டேரல் டேவிட் முன்வைத்த கேள்விக்கு திரு எரிக் சுவா பதிலளித்தார்.
தற்காலிகத் தங்குமிடங்களில் உள்ள சமூக ஊழியர்கள் வீடற்ற தனிநபர்கள், குடும்பங்களுடன் அணுக்கமாகச் செயல்படுகிறார்கள். வாடகை வீடு அல்லது வீடு வாங்குவது போன்ற நிலையான நீண்டகால வீட்டுவசதியை பெற அவர்களுக்கு உதவுகிறார்கள்.
2022ஆம் ஆண்டில் பொது இடங்களில் படுத்துறங்கும் 530 பேர் கண்டறியப்பட்டனர். 2019 ஆம் ஆண்டின் 921 என்ற எண்ணிக்கையைவிட இது குறைவு. இதன்படி, சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு 100,000 பேருக்கும், கிட்டத்தட்ட ஒன்பது பேர் வீடில்லாமல் பொது இடங்களில் தூங்குகிறார்கள்.
இது சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2023 ஏப்ரலில் வெளியிட்ட அண்மைய 2022ன் புள்ளிவிவரங்களாகும்.
அந்த அறிக்கையில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, பொதுவெளியில் உறங்குவோருக்கு ஆதரவு வழங்க தீவு முழுவதும் உதவி நிலையங்கள் இருப்பதாகக் கூறியது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆதரவில் இயங்கும் தற்காலிகத் தங்குமிடங்களில் உள்ள சமூக சேவையாளர்கள் அங்கு வசிப்போர் நிலையான வீட்டுவசதியைப் பெற உதவுகின்றனர். தற்காலிகத் தங்குமிடங்களில் எவ்வளவு காலமும் தங்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2020 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை, அத்தகைய தற்காலிகத் தங்குமிடங்களில் இருந்த 340 பேர் நிலையான நீண்ட காலக் குடியிருப்புக்குச் சென்றனர்.
இணையத்தில் காணப்படும் விதிமுறைகளின்படி, தற்காலிகத் தங்குமிடங்களுக்குச் செல்பவர்கள் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசத் தகுதியுடையவராக இருக்க வேண்டும். தங்குமிடத்தைப் பெறுவதற்கான எந்த வழியும் இல்லாதவராக இருக்க வேண்டும்.