சிங்கப்பூரில் முதல்முறையாக, எரிபொருள் மூலம் ஆற்றலை உருவாக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கார்கள், ‘ஹைபிரிட்’ வகை கார்களைவிட மின்சாரத்தில் இயங்கும் கார்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.
2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 13,322 புதிய கார்களில் 57.6 விழுக்காடு மின்சாரத்தால் இயங்குபவையாகும்.
2025ஆம் ஆண்டில் 45 விழுக்காடு, 2023ஆம் ஆண்டில் 18.1 விழுக்காடு, 2022ஆம் ஆண்டில் 11.7 விழுக்காடு, 2021ஆம் ஆண்டில் 3.8 விழுக்காடாக இருந்த அந்த விகிதம் தற்போது வளர்ச்சி கண்டுள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 7,679 புதிய மின்சாரக் கார்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 3,239 சீனாவின் ‘பிஒய்டி’ நிறுவனத்தைச் சேர்ந்தவை.
இந்த எண்ணிக்கை மொத்த பதிவுகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த கார் சந்தையிலும் பிஒய்டி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருவது உறுதியாகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்ட தரவுகளின்படி, சிங்கப்பூரின் முதல் 10 சிறந்த கார் விற்பனை நிறுவனங்களில், ‘பிஒய்டி’ உடன் சேர்த்து செர்ரீ (ஏழாவது இடம்), ஜிஏசி (எட்டாவது இடம்), எம்ஜி (ஒன்பதாவது இடம்) ஆகியவை முதல்முறையாக இணைந்துள்ளன.
அவை சில தென் கொரிய, ஜப்பானிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த அளவிலான மின்சார வாகன வகைகளைக் கொண்டிருந்தாலும், டோயோட்டோ நிறுவனம் 1,932 பதிவுகளுடன் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, 1,515 பதிவுகளுடன் சந்தையில் 11.4 விழுக்காட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் ஆறாவது இடத்தில் இருந்த டெஸ்லா, தற்போது சிங்கப்பூரின் மூன்றாவது சிறந்த கார் விற்பனை நிறுவனமாக உயர்ந்துள்ளது.
நான்காவது இடத்தில் மெர்சிடிஸ்-பென்சும் ஐந்தாவது இடத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனமும் உள்ளன.

