போக்குவரத்துப் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறும் 60,000 கூடுதல் குடும்பங்கள்

போக்குவரத்துப் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறும் 60,000 கூடுதல் குடும்பங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 7:56 pm

2 mins read

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளுக்கு இந்த ஆண்டு கூடுதலாக 60,000 குடும்பங்கள் தகுதி பெறவிருக்கின்றன.

பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வைச் சமாளிப்பதற்காக வழங்கப்படும் அந்தப் பற்றுச்சீட்டுகளுக்குப் பத்தில் நான்கு குடும்பங்கள் தகுதிபெறுகின்றன.

$2,100 தனிநபர் வருமானம் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெறும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்தது. கடந்த ஆண்டு தனிநபர் வருமான உச்சவரம்பு $1,800ஆக இருந்தது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளின் மதிப்பும் $80க்கு உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு $60 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

டிசம்பர் 26ஆம் தேதி பொதுப் போக்குவரத்துக்கான கட்டண உயர்வு நடப்புக்கு வந்த பிறகு குடும்பங்கள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கட்டண அட்டைகளில் தொகையை நிரப்பலாம் அல்லது மாதாந்தர அட்டைகளை வாங்கலாம்.

கடந்த ஆண்டின்போது பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெற்றோர், இவ்வாண்டும் அதைப் பெறத் தகுதிபெற்றால் டிசம்பர் இறுதியில் தானாக அதைப் பெற்றுக்கொள்வர்.

அஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வழி அதுகுறித்து அவர்களுக்குத் தகவல் அளிக்கப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெற்றும் கடந்த முறை அதைப் பெற்றுக்கொள்ளாதோர் இணையம்வழியோ சமூக மன்றங்களுக்கு நேரடியாகச் சென்றோ அவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதுகுறித்த கூடுதல் விவரங்களைப் போக்குவரத்து அமைச்சு பின்னர் வெளியிடும் என்று குறிப்பிட்டது.

மாதாந்தர கட்டண அட்டைகளுக்கான விலை கடந்த ஆண்டைபோலவே நீடிக்கும். அதன் மூலம் கூடுதலாக 110,000 பயணிகள் அல்லது மொத்த பயணிகளில் கிட்டத்தட்ட நான்கு விழுக்காட்டினர் மாதாந்தர அட்டைகளுக்கு மாறுவதன் மூலம் பயனடைவர் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்தது.

அந்த மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட $26 வரை பயணிகளால் மிச்சம்பிடிக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்
பொதுப் போக்குவரத்துபேருந்துரயில்பற்றுச்சீட்டு