போதைப்பொருளுக்கு எதிரான சோதனையில் 626,700 வெள்ளிக்கும் அதிக பெறுமானமுள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கைதானோரில் 14 வயது மாணவரும் ஒருவர்.
தீவு முழுவதுமாக நடைபெற்ற இந்தச் சோதனை, மே 18க்கும் மே 30க்கும் இடையே நடைபெற்றதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
அங் மோ கியோ, பூன் கெங், புக்கிட் மேரா, ஜூரோங், செங்காங் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
3,588 கிராம் ஹெராயின், 2, 744 கிராம் கஞ்சா, 1,303 கிராம் ஐஸ், 155 கிராம் கெட்டமின், 54 கிராம் எக்ஸ்டசி, 26 கிராம் கொக்கைன், 213 எரிமின் 5 மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.
அத்துடன், டிஹெச்சி எனும் வேதிப்பொருள் அடங்கிய 49 மின்சிகரெட்டுகளும் 22 எல்எஸ்டி முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் 2,840 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்துவதற்குப் போதுமானவை.
மே 23ஆம் தேதி காலை 23 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து வெளிநாட்டு ஆடவர்கள் துவாஸ் சவுத் அவென்யூக்கு அருகில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான 23 வயது ஆடவர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் பிடிப்பட்டார். அவரிடம் 2 கிராம் கஞ்சா இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மற்றொரு 24 வயது ஆடவரிடம் சிறிதளவு ஐஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், வீட்டு அறை ஒன்றில் கிட்டத்தட்ட 27 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை வைத்திருந்ததன் பேரில் அந்த அறையில் தங்கியிருந்த 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டனர்.
மே 28ஆம் தேதி பிற்பகலில், கேலாங் லோரோங் 10லுள்ள ஹோட்டல் அறையை அதிகாரிகள் சோதித்தபோது, 46 வயது ஆடவர் ஒருவர் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
அதற்கு மறுநாள், தெம்பனிஸ் ஸ்திரீட் 86லுள்ள கூட்டுரிமை வீடு ஒன்றின் கார் நிறுத்தும் இடத்தில் 29 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணை தொடர்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் போதைப்பொருள் கடத்துவோருக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது.