60ஆம் ஆண்டுமலருக்கும் தனக்கும் தொடர்பில்லை: தற்காப்பு அமைச்சு

60ஆம் ஆண்டுமலருக்கும் தனக்கும் தொடர்பில்லை: தற்காப்பு அமைச்சு

2 mins read
865d9f6b-a5d5-4ec9-9700-4ecaaca48b39
சிங்கப்பூர் ஆயுதப்படை, 2025 மே முதல் அக்டோபர் வரை நடமாடும் கண்காட்சி ஒன்றை நடத்தித் தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் ஆயுதப்படையைப் பற்றிய 60ஆம் ஆண்டுமலரைத் தயாரிப்பதாகக் கூறும் நிறுவனம் ஒன்று அணுகினால் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களிடம் தற்காப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

‘புரூக்லண்ட்ஸ் நியூ மீடியா’ (Brooklands New Media) என்ற நிறுவனம் பற்றித் தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் அறிவதாக அமைச்சு மே 8ல் வெளியிட்ட தனது பதிவில் குறிப்பிட்டது.

‘புரூக்லண்ட்ஸ் நியூ மீடியா’வுடன் சிங்கப்பூர் ஆயுதப்படைக்கோ தற்காப்பு அமைச்சுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்ட அந்தப் பதிவு, அந்தப் பதிப்பிற்கும் அதன் உள்ளடக்கங்களுக்கும் தாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறியது.

இந்தப் பதிப்புக்காக அணுகப்படும் தனிநபர்களும் அமைப்புகளும் இதனைக் கருத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றது அந்தப் பதிவு.

சிங்கப்பூர் ஆயுதப்படை, 2025 மே முதல் அக்டோபர் வரை நடமாடும் கண்காட்சி ஒன்றை நடத்தித் தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

புரூக்லண்ட்ஸ் நியூ மீடியா தன்னைச் சிறப்புப் பதிப்பகமாகக் கூறிக்கொள்வதோடு, அது பிரிட்டனிலிருந்து இயங்கி வருவதாகத் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

புரூக்லண்ட்ஸ் நியூ மீடியாவுடன் தங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று சிங்கப்பூர் அமைப்பு ஒன்று பொதுவெளியில் விளக்கம் அளிப்பது இது முதல் முறையல்ல.

2024ல், மத்திய சேமநிதிக் கழகமும் இதேபோன்ற ஓர் அறிக்கையை வெளியிட்டதாக சாவ்பாவ் (Lianhe Zaobao) தெரிவித்தது. அத்துடன், பொருளியல் மேம்பாட்டுக் கழகம் (Economic Development Board), சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (Cyber Security Agency of Singapore) உள்ளிட்ட அமைப்புகளும் கடந்த காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகவும் அது குறிப்பிட்டது.

தெமாசெக் தோற்றுவிக்கப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டுப் புரூக்லண்ட்ஸ் நியூ மீடியா வெளியிடத் திட்டமிட்டிருந்த புத்தகத்திற்குத் தாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை என்று தெமாசெக் ஹோல்டிங்ஸ் 2022ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்