புத்தாண்டு நெருங்கி வருகிறது. அதனை வரவேற்கும் அதே வேளையின் சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களும் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறும் எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) தெரிவித்தது.
செந்தோசா, மரினா பே சேண்ட்ஸ், குறிப்பிட்ட 17 குடியிருப்பு வட்டாரங்கள் போன்ற இடங்களில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறும் கொண்டாட்டங்களில் சிங்கப்பூரர்கள் கலந்துகொள்ளலாம் என அமைச்சு கூறியது.
ஒன்றிணைந்து சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளில் 60வது தேசிய தினத்திற்கான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். பல்லினக் கலாசாரம், மீள்திறன், வெளிப்படைத்தன்மை, தைரியம் போன்ற விழுமியங்களைச் சிங்கப்பூரர்கள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இக்கொண்டாட்டங்கள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் ‘மீடியாகார்ப்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பலதரப்பட்ட கலை படைப்புகள், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றை மக்கள் கண்டுகளிக்கலாம்.
ஃபுல்லர்டன் ஹோட்டலில் நடக்கும் வண்ண ஒளிப் பாய்ச்சும் கண்கவர் நிகழ்ச்சிகள், எஸ்பிளனேட் - கலையரங்கத்தில் நடைபெறும் நேரலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் ஆகியவற்றை மரினா பேயில் மக்கள் பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சிகள் டிசம்பர் மாதத்தில் வெவ்வேறு நாள்களில் நடைபெறும். அதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
செந்தோசா தீவின் சிலோசோ கடற்கரைக்கு டிசம்பர் மாதம் கொண்டாட்டத்திற்கான காலமாகும். அங்கு யுவென் இசைத் திருவிழாவில் அனைத்துலக இசை நிகழ்ச்சிகளும் 1,000க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள் (Drone) அமைக்கும் வண்ணமயமான காட்சிகளும் கண்கவர் வாணவேடிக்கைகளும் நடைபெறும்.
மூன்று நாள் நடைபெறும் இந்த இசைத் திருவிழா டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
கிளார்க் கீ, ஆர்ச்சர்ட் ரோடு, சாமர்செட் உட்பட மேலும் 17 குடியிருப்பு வட்டாரங்களிலும் வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றை பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குமிடங்களிலும் அவர்களுக்கான பொழுதுபோக்கு நிலையங்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரலை நிகழ்ச்சிகள், உணவு நிலையங்கள்,விளையாட்டுகள் ஆகியவையும் வெற்றியாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.