சிங்கப்பூர் காவல் துறை சுவா சூ காங் பகுதியில் போலியான கைக்கடிகாரங்களை விற்ற சந்தேகத்தின் பேரில் 61 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) தெரிவித்துள்ளது.
அந்த 61 வயது ஆடவர் போலியான கைக்கடிகாரத்தை $100க்கு ஒருவரிடம் விற்று அவரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
அது போலியான கைக்கடிகாரம் என்பதை அறிந்தவுடன் அதை வாங்கியவர் அது குறித்து காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27ஆம் தேதி) காலை 11.30 மணிக்கு புகாரளித்தார்.
இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், அந்த ஆடவர் தான் சூதாட்டக்கூடத்தில் தமது பணத்தை இழந்துவிட்டதாக பொது இடங்களில பலரையும் அணுகி தெரிவித்ததாக அறியப்படுகிறது. அதனால், சிறப்பு முத்திரைப் பதிப்புடைய கைக்கடிகாரங்களை $100 வெள்ளியிலிருந்து $300வரை விற்க விரும்புவதாக தான் சந்தித்த பலரிடம் கூறியுள்ளார்.
அவர் மீது புகாரளிக்கப்பட்ட ஐந்து மணி நேரத்தில் அந்த ஆடவரை ஜூரோங், தங்ளின் காவல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடமிருந்து போலியான என நம்பப்படும் பல கைக்கடிகாரங்கள், $1,340 ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆடவர் மீது சனிக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) ஏமாற்றுக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.


