குடித்துவிட்டு கார் ஓட்டிய குற்றத்திற்காக 62 வயது ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிலேத்தார் கன்ட்ரி கிளப் நீச்சல்குளத்தில் விழுந்த நிலையில் கார் ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அந்த ஆடவரைக் கைது செய்தது.
101 சிலேத்தார் கிளப் ரோட்டில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) இரவு 10.05 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
கார் விபத்து தொடர்பான காணொளி Roads.sg ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. குளத்திற்குள் காரின் முன்பகுதி இறங்கிய நிலையில் பின்பக்கம் தூக்கி இருந்தது. அதன் விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன.
சிறிய காயங்களுடன் காணப்பட்ட ஓட்டுநர், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பாக உதவிகேட்டு தங்களுக்கு இரவு 10.35 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல்பாதியில் 96க்கு அதிகரித்தது. 2023 முதல்பாதியில் அந்த எண்ணிக்கை 88ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, குடித்துவிட்டு வாகனம் ஓட்டும்போது நிகழும் விபத்துகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கையும் இவ்வாண்டின் முதல் பாதியில் 9க்கு அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் 3ஆக இருந்த அந்த எண்ணிக்கை, 2023ல் 8க்கு அதிகரித்தது.