தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூனோஸ் வீட்டில் மாண்டு கிடந்த ஆடவர்

2 mins read
5cbbd99b-7fbe-46f9-a4bf-e292dba95d57
யூனோஸ் கிரசன்ட் புளோக் 33இல் காவல்துறை வாகனங்கள் காணப்பட்டன. வீவக புளோக் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்த வீட்டில் 63 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. - படங்கள்: ஷின் மின்

யூனோசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் 63 வயது ஆடவர் ஒருவர் திங்கட்கிழமையன்று மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

யூனோஸ் கிரசன்ட், புளோக் 33இன் மூன்றாவது தளத்தில் உள்ள வீடு ஒன்றில், இயற்கைக்கு மாறான மரணத்தின் தொடர்பில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

அந்த ஆடவர் மூச்சுபேச்சின்றி கிடந்ததாகவும், அவரது மரணம் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

மாண்ட ஆடவர் தனியாக வசித்துவந்தார் என்று அண்டைவீட்டார் ஷின் மின் செய்தியாளர்களிடம் கூறினர். அவர் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பார் என்றும் அண்டைவீட்டாருடன் அதிகம் பேச மாட்டார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, சந்தேகப்படும்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.

சம்பவம் நிகழ்ந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவில் கடந்த ஞாயிறன்று இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அன்றைய நாள் பிற்பகலில் யூனோஸ் கிரசன்ட் புளோக் 35இன் கீழ்த்தளத்தில் 33 வயது மாதும் ஒரு வயதுப் பெண் குழந்தையும் மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.

அதற்கு மறுநாளே, 63 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நிகழ்ந்துள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஷின் மின் கூறியது.

புளோக் 35இன் கீழ்த்தளத்தில் பெண்கள் சிலர் கூடுவது வழக்கம் என்று பெண் குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். ஆனால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதி அமைதியாகவே இருப்பதாக அவர் ஷின் மின் நாளிதழிடம் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்