துறைமுகச் செயல்பாட்டு நிறுவனமான பிஎஸ்ஏ, துவாசில் $647.5 மில்லியன் மதிப்பிலான அதன் புதிய சேமிப்புக் கிடங்கை நிறுவவிருக்கிறது.
புதிய பிஎஸ்ஏ விநியோகச் சங்கிலி நடுவத்தைக் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தொடங்கப்பட்டுள்ளன.
மேம்பட்ட எந்திரனியல் தொழில்நுட்பம், தானியக்கக் கட்டமைப்பு ஆகியவை இப்புதிய நடுவத்தில் இடம்பெற்றிருக்கும்.
இந்த ஆண்டு (2024) பிஎஸ்ஏ சாதனை அளவாக 40 மில்லியன் 20-அடிக் கொள்கலன்களைக் கையாள இலக்கு கொண்டுள்ள வேளையில் புதிய நடுவத்தின் கட்டுமானம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
185,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் துவாஸ் பெருந்துறைமுகத்துக்கு அருகில் அது அமைந்திருக்கும். 2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அது கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நடுவத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அதிகாரபூர்வ தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார்.
இந்த நடுவம் கப்பல்வழி அனுப்பப்படும் சரக்குகளைக் கையாளும் திறனை மேம்படுத்த உதவும் என்றார் அவர்.
அபாயகரமான பொருள்களையும் குளிரூட்டும் வசதி தேவைப்படும் பொருள்களையும் கையாள்வதற்கான சிறப்பு வசதிகள் இந்த நடுவத்தில் இருக்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் சிறப்பாகக் கையாளப்படவேண்டிய மருந்துப்பொருள்கள், ரசாயனப் பொருள்கள் போன்றவற்றை இது கையாளும்.
“இத்தகைய சிறப்பு சேவை தேவைப்படும் நிறுவனங்கள் தற்போது சரக்கைத் துறைமுகத்திலிருந்து சுங்க வரி செலுத்தி வெளியே எடுத்து, வேறிடத்தில் வைத்திருந்து, பின்னர் மீண்டும் துறைமுகத்திற்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதனால் கூடுதல் நேரம், அதிகக் கட்டணம் போன்றவற்றை அந்நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன,” என்றார் பிரதமர்.
இனி இத்தகைய சிறப்பு சேவைகளை துவாஸ் துறைமுகத்திலேயே அவை பெறமுடியும் என்பதை அவர் சுட்டினார். தடையற்ற வர்த்தக வட்டாரத்தில் சேமிக்கப்படுவதால் அந்த சரக்குகளுக்கு சுங்க வரி செலுத்தத் தேவையில்லை.
கப்பல் போக்குவரத்துத் துறையில் போட்டித்தன்மை வெகுவாக அதிகரிக்கும் நிலையில் சிங்கப்பூரில் இப்புதிய நடுவம் கட்டப்படவிருக்கிறது.
ஷாங்காய், ரோட்டர்டாம் போன்ற துறைமுகங்கள் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகத் திரு வோங் கூறினார்.
உலகெங்குமுள்ள பல துறைமுகங்கள் குளிரூட்டும் வசதி, வட்டார விநியோக நிலையம் போன்ற வசதிகளையும் வழங்குவதை அவர் சுட்டினார்.
வரும் ஆண்டுகளில் துவாஸ் துறைமுகத்தில் கூடுதல் மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம் என்றார் திரு வோங்.
$20 பில்லியன் செலவில் நான்கு கட்டங்களில் உருவாக்கப்படும் துவாஸ் துறைமுகம், 2040களில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது 65 மில்லியன் 20-அடிக் கொள்கலன்களைக் கையாளும் திறன் பெற்றிருக்கும். அப்போது அது உலகின் ஆகப் பெரிய தானியக்க முறையில் இயங்கும் துறைமுகமாக விளங்கும்.

