65 வயதிலும் துடிப்புடன் சேவையாற்றும் கணேசன்

65 வயதிலும் துடிப்புடன் சேவையாற்றும் கணேசன்

2 mins read

தேசிய காற்பந்து விளையாட்டாளராக, விமானியாக, இளையர்களுக்கு வழிகாட்டியாக, திரு வெள்ளசாமி கணேசன் பல்வேறு துறைகளில் காலூன்றி தடம் பதித்துள்ளார்.

1970களில் 'லயன்ஸ்' சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியில் விளையாட்டாளராக இணைந்த இவர், ப்ரீ ஒலிம்பிக்‌ஸ் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். குறிப்பாக, 1977ல் நடந்த மலேசியா கப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட விளையாட்டு வீரர்களில் திரு கணேசனும் ஒருவர். 12 ஆண்டுகளில் முதல் முறையாக சிங்கப்பூர் அணி மலேசியா கப் போட்டியில் வெல்வதற்குக் காரணமாக அமைந்து, சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார் திரு கணேசன்.

ஒரு சிங்கப்பூரராக அப்போட்டி யில் விளையாடி வெற்றிப்பெற்றது தனக்குக் கிடைத்தப் பெரிய அங்கீகாரமாகக் கருதினார் அவர். அவ்வெற்றியின் மூலம் சிங்கப்பூரர்களுக்கும், சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்கும், பெருமையும் மகிழ்ச்சியும் சேர்த்ததையும், தன்னால் முடிந்த அளவில் இளமையிலேயே நாட்டிற்குப் பங்காற்ற முடிந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

"மக்கள் என்னை அடையாளம் கண்டு என்னை வாழ்த்தத் தானாகவே முன்வந்தனர். அந்நினைவுகள் மிக இன்பமானவை. ஆனால், அதனைவிட எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்தது, சாதாரணப் பின்னணியிலிருந்து வந்த என் பெற்றோருக்கு நான் பெருமை சேர்த்து தான். என்னை வாழ்த்த வந்தோர், என் பெற்றோரையும் பாராட்டிச் சென்றனர். குறுகிய காலக்கட்டத்தில் ஓர் இளையராக சிங்கப்பூரின் விளையாட்டுத் துறையில் நான் உயர்ந்ததைப் பலரும் பாராட்டி ஆதரவளித்ததையும் என்னால் மறக்க இயலாது." என்று திரு கணேசன் கூறினார்.

விளையாட்டுத் துறையில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குத் திறம்பட பணியாற்றியப்பின், 1984ஆம் ஆண்டில் அவர் குடும்ப நலன் கருதி அத்துறையிலிருந்து விலக வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. எட்டுப் பேர் கொண்ட தனது குடும்பத்துக்கு வருமானம் ஈட்டவேண்டிய நிலையில் அவர் இருந்தார். அம்முடிவு ஒரு முற்றுப்புள்ளியாக இல்லாமல் ஒரு புதிய ஆரம்பத்துக்கு இட்டுச்சென்றது. விமானப் பொறியியல் நிபுணராகப் பணியாற்றிய அவரது அனுபவத்தின் தொடர்ச்சியாக 1985ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தில் பயிற்சி மேற்கொண்டதன் பின்னர், அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக இணைந்தார். அவரது 43 ஆண்டு சேவைக்குப் பின், தற்போது 65 வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

"ஓய்வு பெறவேண்டிய கட்டாயம் இல்லையெனில், நான் இன்னமும் விமானம் ஓட்டிக்கொண்டுதான் இருக்க ஆசை. இருப்பினும், என்னால் முடிந்த வகைகளில் இன்னும் இத்துறைக்குப் பங்காற்ற முயன்று வருகிறேன். என்னோடு இத்துறையில் பயணித்தச் சக ஊழியர்களும், என்னோடு கலந்துரையாடி மகிழும் இளைய விமானிகளும், என்னோடு செலவிடும் நேரத்தில் உத்வேகம் அடைகின்றனர் என்பது எனக்கு நிறைவைத் தருகின்றது. என்னிடம் இருந்து ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக அவர்கள் சொல்வதுண்டு. அத்தகைய கருத்துக்கள் என்னை மேன்மேலும் பங்காற்ற ஊக்குவிக்கின்றன." என்றார் திரு கணேசன்.

-
-