சிங்கப்பூர் முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 9 முதல் 13 வரை நடைபெற்ற போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கைகளில் 954 கிராம் ஹெராயின், 201 கிராம் ஐஸ் போதைப்பொருள், 158 கிராம் கஞ்சா, 20 கிராம் எக்ஸ்டசி, 9 கிராம் கெட்டமின், 428 போதை மாத்திரைகள், போதையூட்டும் திரவம் நிறைந்த ஐந்து போத்தல்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமை (செப்டம்பர் 16) காலை வெளியிட்ட தனது அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்து உள்ளது.
பிடோக், புவாங்கோக், கிளமெண்டி, கேலாங் பாரு, மரின் பரேட், தெம்பனிஸ் போன்ற வட்டாரங்களில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவர் 20 வயது சிங்கப்பூர் ஆடவர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் அவர் பிடிபட்டார்.
செப்டம்பர் 11ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $120,000 என கணக்கிடப்பட்டு உள்ளது. அவை ஒரு வார காலத்துக்கு 510 போதைப் புழங்கிகள் பயன்படுத்தும் அளவிலானவை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
65 பேர் கைது செய்யப்பட்டு ஏராளமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
15 கிராமுக்கு மேல் ஹெராயின் அல்லது 500 கிராம் கஞ்சாவைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கடந்த ஆண்டு பறிமுதல் செய்த போதைப்பொருள்களின் மதிப்பு 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவு.
2022ஆம் ஆண்டு $16.66 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பிடிபட்ட நிலையில், கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $15.58 மில்லியனாக இருந்தது.

