அண்டைவீட்டாரைக் கொன்றதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

அண்டைவீட்டாரைக் கொன்றதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Jan 2024 - 4:32 pm

1 mins read

சிங்கப்பூரில் 43 வயது மாதான தனது அண்டைவீட்டாரைக் கொன்றதாக 65 வயது ஆடவர் ஒருவர்மீது ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குவெக் எங் ஹொக் என்ற அந்த ஆடவர் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் புளோக் 460Bஇல் உள்ள ஒரு வீட்டில் அந்த மாதைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அச்சம்பவம் ஜனவரி 6ஆம் தேதி காலை 8.20 மணிவாக்கில் நடந்தது.

மருத்துவமனை ஒன்றிலிருந்து காணொளி இணைப்பு மூலம் அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த நேரத்தில் அவர் தனது கண்களைத் திறக்கவில்லை என்றும், எதுவும் பேசவில்லை என்றும் சீன நாளிதழான ஷின்மின் கூறியது.

காயமடைந்த அந்த மாதின் 5 வயது மகன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தான்.

ஜனவரி 6ஆம் தேதி காலை 8.20 மணிக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறையினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்தில் அந்த மாது மாண்டுகிடக்கக் காணப்பட்டதைக் கண்டனர்.

அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டார்.

அதே நாள் பின்னேரத்தில் அந்த அடுக்குமாடி கட்டடத்தின் குப்பைத்தொட்டியில் கத்தி ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கத்தி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

குவெக், வரும் ஜனவரி 26ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும்.

Watch on YouTube
Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
கொலை