தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘போலி நண்பர்’ மோசடியில் $650,000 இழப்பு

1 mins read
10c76e48-8aef-49cb-99c8-98af1f4aaf1b
நண்பரைப் போல தங்களைக் காண்பித்துக்கொள்ளும் மோசடி அதிகரிப்பதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நண்பர்களைப் போல பழகிய மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டோர் குறைந்தது $653,000 தொகையை இழந்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தில் அத்தகைய மோசடிகள் குறித்து குறைந்தது 187 புகார்கள் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை திங்கட்கிழமை (மே 26) தெரிவித்தது. அதுபோன்ற மோசடிகள் அதிகரிப்பதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

இத்தகைய சம்பவங்களில் நண்பர்களைப் போல தங்களைக் காட்டிக்கொள்ளும் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரை உள்ளுர் தொலைபேசி எண்களிலிருந்து வாட்ஸ்அப் செயலி மூலம் அழைப்பர் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவர்.

பாதிக்கப்பட்டோரிடம் தாங்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும்படி கூறும் மோசடிக்காரர்கள், அவர்களின் தொடர்பு விவரங்களில் மாற்றம் செய்யும்படி கூறுவர்.

அதையடுத்து மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரைத் தொடர்புகொண்டு கடன் கேட்பார்கள் அல்லது வங்கிப் பரிவர்த்தனையைச் செய்யும்படி கூறுவார்கள். மோசடிக்காரர்கள் உள்ளூர் வங்கிக் கணக்கு, பேநவ் (PayNow) எண் அல்லது கியூஆர் குறியீட்டையும் கொடுப்பதுண்டு.

உண்மையான நண்பர் அல்லது தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளும்போது அல்லது வாங்கிய கடனைத் திரும்பப் பெறாதபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டோர் அறிந்துகொள்வர்.

அவசரமாக கடன்கள் கேட்டு தெரியாத எண்ணிலிருந்து அழைப்போர் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

பணம் கேட்போரின் அடையாளம் சரிவர உறுதிசெய்யப்படும்வரை பணத்தை அனுப்பவேண்டாம் என்றும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்