பல நாடுகளையும் அவற்றின் அதிகார எல்லைகளையும் கடந்து செயல்பட்ட குற்றக்கும்பலைத் தடுக்க அனைத்துலகக் காவல்துறையான இன்டர்போல் அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் செயலாற்றியது.
சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் (எச்எஸ்ஏ) இங்கு மேற்கொண்ட பல சோதனைகளில் உரிமம் பெறாத, போலியாகத் தயாரிக்கப்பட்ட மருந்து வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூருடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒட்டுண்ணிப் புழுத் தொற்றுக்கு வழங்கப்படும் மருந்து, விலங்குகளின் குடலில் புழுக்கள் தாக்காமல் உதவும் மருந்து போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளதாக இன்டர்போல் அமைப்பு வியாழக்கிழமை (மே 7) தெரிவித்தது.
ஊட்டச்சத்து மருந்துகள் என்ற பெயரில் போலியான விளம்பரப் பெயர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை அவை. புற்றுநோய் சிகிச்சைக்கு உகந்தவை என்று அவை விற்கப்படுகின்றன.
அதனால் அவற்றை எளிதில் அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாது என்று இன்டர்போல் குறிப்பிட்டது.
கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 90 நாடுகள் இந்த அனைத்துலக அமலாக்க நடவடிக்கையில் பங்கேற்றதாக இன்டர்போல் விளக்கியது.
‘ஆபரேஷன் பங்கே’ என்ற பெயரில் உலக அளவில் நடந்த நடவடிக்கையில், 6.42 மில்லியன் முறை உட்கொள்ளக்கூடிய மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு S$19.67 மில்லியன் என்று இன்டர்போல் மதிப்பிட்டுள்ளது.
இணையத்தில் விற்பனையாகும் இவ்வகைச் சட்டவிரோத மருந்துகளைத் தடுக்க 2008ஆம் ஆண்டுமுதல் இன்டர்போல் இந்த அனைத்துலக அமலாக்க நடவடிக்கையை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பதிவு செய்யப்படாத கண் ஒட்டுவில்லைகள் போன்றவற்றின் பதிவுகளை இணையத்தில் நீக்கிவிட்டதாகக் குறிப்பிட்ட ஆணையம், 6,641 சட்டவிரோதச் சுகாதாரப் பொருள்களை நிலச் சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்ததை வியாழக்கிழமை வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்தது.
அஞ்சல் துறைமூலம் 88 விழுக்காட்டு மருந்துப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்டவையில் 36 விழுக்காடு மயக்க மருந்துகளும் வலி நிவாரண மருந்துகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

