வாழ்நாள் கற்றலை ஆதரிக்கும் பட்டயப்படிப்பு

வாழ்நாள் கற்றலை ஆதரிக்கும் பட்டயப்படிப்பு

3 mins read
4a1c03ef-39e9-46c2-93b3-0dd0fadcb6f5
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பட்டயமளிப்பு விழாவில், 5,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். - படம்: சாவ்பாவ்

மாறிவரும் உலகச் சூழலும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும், வேலைகளைப் பாதித்திருப்பதாகக் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

பணியிடத்திற்கு மட்டும் மாணவர்களைத் தயார்ப்படுத்தாமல், வருங்காலப் பொருளியல் சூழலிலும் அவர்கள் தாக்குப்பிடிக்க, தொழில் சார்ந்த திறன்களையும் மென்திறன்களையும் சிங்கப்பூரின் உயர் கல்வி நிலையங்கள் கற்றுக்கொடுப்பதாக டாக்டர் ஜனில் கூறினார்.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பட்டயமளிப்பு விழாவின்போது உரையாற்றிய அவர், அத்தகைய சூழலுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்த சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி எடுத்துவரும் முயற்சிகளை மெச்சினார்.

செயற்கை நுண்ணறிவு இன்றைய வாழ்வோடு பின்னிப்பிணைந்திருப்பதால், மாணவர்களுக்கு அதை அறிமுகப்படுத்த பள்ளிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

பட்டயமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய கல்விக்கான மூத்த துணையமைச்சரும், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சருமான ஜனில் புதுச்சேரி.
பட்டயமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய கல்விக்கான மூத்த துணையமைச்சரும், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சருமான ஜனில் புதுச்சேரி. - படம்: சாவ்பாவ்

அவ்வகையில், சேட் ஜிபிடியின் ‘குழு சாட்’ அம்சத்தைப் பயன்படுத்தி மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கு இடையிலும் ஒற்றுமையை வளர்க்க பலதுறைத் தொழிற்கல்லூரி எடுத்துள்ள முயற்சியை அமைச்சர் சுட்டினார். 

அதோடு, தேசியப் பூங்காக் கழகம், ஜூரோங் நகராண்மைக் கழகம், நகர மறுமேம்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகளோடு ஒன்றிணைந்து நீடித்த நிலைத்தன்மைக்காக, பட்டயம் பெற்ற மாணவர்கள் எடுத்த முயற்சிகளையும் பாராட்டினார். 

மே 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பட்டயமளிப்பு விழாவில் 5,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மென்திறன்களில் ஒன்றான குழுவொற்றுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம், ஒவ்வோர் ஆண்டிலும் அதைக் கற்றுகொண்டு மேம்படுத்துவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

அவற்றில் சிறப்பாகச் செய்தோர்க்கு, குழுவொற்றுமையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ஒன்று 1,890 பட்டதாரிகளுக்குச் சிங்கப்பூர்ப் பலதுறை தொழிற்கல்லூரி முதன்முறையாக கொடுத்தது.

பரபரப்பான உலகச் சூழலில் பின்னடைவு காணாமல் இருக்க, பெரியவர்களில் சிலர் எடுத்த முயற்சிகளையும் பட்டயமளிப்பு விழா அங்கீகரித்தது.

தொடர் கற்றல் மற்றும் பயிற்சித் திட்டத்தின் ஒரு மைல்கல்லாக, மூன்று பேருக்கு வாழ்நாள் கற்றல் விருது வழங்கப்பட்டது. அவர்களுள் ஒருவர் 60 வயது தனுஜா கப்பூர்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வழிகாட்டுதல், ஒருங்கிணைத்தல் திறன்களுக்கான நிபுணத்துவ பட்டய வகுப்பில் சேர்ந்தார் 60 வயது தனுஜா கப்பூர்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வழிகாட்டுதல், ஒருங்கிணைத்தல் திறன்களுக்கான நிபுணத்துவ பட்டய வகுப்பில் சேர்ந்தார் 60 வயது தனுஜா கப்பூர். - படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்த கையோடு, சிங்கப்பூருக்கு வந்து தாய்மொழி கற்றல் வகுப்பு ஆசிரியராக பொறுப்பேற்றார்.

முன்பு மாணவர்களுக்குக் கற்றுகொடுத்த தனுஜா, கற்பித்தல் முறைகளை ஆசிரியர்களுக்கு கற்பித்து வருகிறார் .

பிறருக்கு எவ்வாறு சிறப்பாக கற்றுக்கொடுப்பது என்பதை கற்றுக்கொள்ளும் தீவிர முனைப்புடன் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வழிகாட்டுதல், ஒருங்கிணைத்தல் திறன்களுக்கான நிபுணத்துவ பட்டய வகுப்பில் தனுஜா சேர்ந்தார். 

வாரத்தில் மூன்று முறை வகுப்புகள் நடந்தன, ஒவ்வொன்றும் ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு நீடிக்கும்.

அறுபது வயதில், வேலையையும் குடும்பத்தையும் சமாளிப்பது என்பது எளிதன்று.

அதைத் தாண்டி, கல்வி கற்பது என்பது சவால்மிக்க ஒன்றே.

அது போன்ற கருத்துகளைப் பிறர் எழுப்பினாலும், “வயது ஒரு எண் மட்டுமே,” என்று கூறி படிப்பை மேற்கொண்டார் தனுஜா.

இந்த சாதனைக்கு முக்கிய காரணிகளாக தமது குடும்பத்தையும் ஆசிரியரையும் குறிப்பிட்டார் தனுஜா. 

இந்த வகுப்பு பற்றி, தமது மேலாளர் அவரிடம் பகிர்ந்தவுடன், தனுஜா உடனே தமது குடும்பத்தாரிடம் பகிர்ந்தார்.

எவ்வித தயக்கமுமின்றி, அவரை வகுப்பில் சேரும்படி ஊக்குவித்தனர்.

“வகுப்புநேரத்தின் போது, பேரப்பிள்ளை பிறந்துவிட்டான் என்ற செய்தி குறுந்தகவல் மூலமாக கிடைத்தபோது, ‘முதலில், உன் பேரப்பிள்ளையைப் பார்த்துவிட்டு வா,’ என்று என் பயிற்றுவிப்பாளர் கூறினார்,” என்று நினைவுக்கூர்ந்தார் தனுஜா.

“இந்த விருது கிடைத்ததில், மேகங்களுக்கு மேல் மிதப்பது போன்ற ஓர் உணர்வு எனக்கு உள்ளது. நான் எடுத்த முயற்சிகளை இது அங்கீகரித்திருப்பதில் பெருமையாக உள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் தனுஜா.

குறிப்புச் சொற்கள்