தோ பாயோ சென்ட்ரல் வட்டாரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 67 வயது ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (மே 29) கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து மே 28ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. ஆடவர் 79 வயது பெண்ணிடமிருந்து தோள்பையைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து ஆடவர் தப்பியோட முயன்றபோது பெண் உதவிக்காகக் கத்தினார். பெண்ணின் தோள்பையில் ரொக்கம், கைப்பேசி, கடனட்டைகள் என $1,000க்கும் அதிகமான மதிப்புடைய பொருள்கள் இருந்தன.
விசாரணை மூலமும் கண்காணிப்புக் கேமராக்கள், காவல்துறை கேமராக்கள் மூலமும் ஆடவரின் அடையாளத்தை அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
அதையடுத்து ஐந்து மணி நேரத்துக்குள் ஆடவர் பிடிபட்டார்.
முதற்கட்ட விசாரணையில் ஆடவர் குறைந்தது மூன்று வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.
ஆடவர்மீது வெள்ளிக்கிழமை (மே 30) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஏழாண்டு சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
வழிப்பறியை எதிர்கொள்வோர் அமைதிகாத்து திருடியவரின் அடையாளத்தை உன்னிப்பாகக் கவனித்து உதவிக்கு அழைக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியது.