19 வயதுப் பெண்ணைச் சித்திரவதை செய்த ஆடவருக்கு 14 ஆண்டு, 11 மாதம் சிறைத் தண்டனை

19 வயதுப் பெண்ணைச் சித்திரவதை செய்த ஆடவருக்கு 14 ஆண்டு, 11 மாதம் சிறைத் தண்டனை

3 mins read
0aa1d65a-f63d-4382-8147-a72f060aaf9b
லிம் பெங் டியோங் தன்மீது சுமத்தப்பட்ட நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். - படம்: ஃபேஸ்புக்

கிளமெண்டியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு மாதத்திற்கும் மேலாக 19 வயதுப் பெண்ணை பட்டினிபோட்டு சித்திரவதைச் செய்த 67 வயது ஆடவருக்கு திங்கட்கிழமை (மே 25) 14 ஆண்டு, 11 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சித்திரவதையில் அந்தப் பெண் உயிரிழந்தார்.

“கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 1, புளோக் 602ல் உள்ள வீட்டில் பயங்கரமான, அர்த்தமில்லாத சித்திரவதையால் செல்வி ஹுவாங் பேயிங் 2021 மே 5ஆம் தேதி மரணமடைந்தார்,” என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த வீட்டின் உரிமையாளரான லிம் பெங் டியோங் பிப்ரவரி 9ஆம் தேதி குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர் மீதான குற்றச்சாட்டு நோக்கமில்லா மரணம் விளைவித்ததாக மாற்றப்பட்டது.

ஊட்டச்சத்து குறைபாடு, மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட அதிர்ச்சியால் செல்வி ஹுவாங் உயிரிழந்தார்.

உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது அவரது எடை 27.6 கிலோவாக இருந்தது. 2020 ஜூனில் 48.8 கிலோவாக இருந்த அவரது உடல் எடை 11 மாதங்களில் 43 விழுக்காடு குறைந்தது.

லிம்முக்கு சிறைத்தண்டனைத் தவிர பிரம்படியும் விதிக்கப்பட்டது. ஆனால் பிரம்படிக்குப் பதிலாக ஆறு மாதம் கூடுதல் சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். ஐம்பது வயது மேற்பட்டவர்களுக்கு பிரம்படி கொடுக்க முடியாது.

லிம் தவிர பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரும் அவரது திருமணமான காதலியும் கொடூரமானச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவர்மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தீர்ப்பின்போது பேசிய ​​உயர் நீதிமன்ற நீதிபதி பாங் காங் சாவ், குற்றம் சாட்டப்பட்ட மூவரில் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு வழிவகுத்த அம்சங்களில் லிம்மின் ஈடுபாடு மிகக் குறைவாக இருந்ததாகவும் அவர் மற்ற இருவரின் தூண்டுதலுக்கும் வற்புறுத்தலுக்கும் ஆளாகி செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர், அவரது கொடூரமான செயல்களைக் கருத்தில்கொண்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

லிம், பாதிக்கப்பட்ட பெண் திருவாட்டி ஹுவாங், அவரது சகோதரர் 34 வயது ஹுவாங் போகேன் ஆகிய மூவரும் ஊட்டச்சத்து பொருள்களை விற்கும் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஹுவாங் போகேனின் காதலி 46 வயது சீ மெய் வான் பயிற்றுவிப்பாளராக இருந்தார்.

உறுப்பினர்களின் தீயப் பழக்கங்களுக்கு திருத்துவதற்காக ஒரு தண்டனை முறையை சீ அறிமுகப்படுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாக ஹுவாங்குக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் சித்திரவதை மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தலாக மாறி அதிகரித்தது.

ஒரு சம்பவத்தில் திருவாட்டி ஹுவாங் 240 முறை தாக்கப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் அவர் கழிவறைத் தொட்டிக்கு அருகே சங்கிலியால் கட்டப்பட்டார். அவருக்கு உணவும் வழங்கப்படவில்லை.

பலமுறை அடித்தாலும் திருவாட்டி ஹுவாங் அமைதியாக இருந்ததை சீ மற்றும் ஹுவாங் போக்கன் ஒரு எதிர்ப்பாகக் கருதினர்.

அம்மூவரும் அவரது தலையை பனிக்கட்டி நீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் அழுத்திப் பிடித்தது உட்பட பல வழிகளில் சித்திரவதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அவரது காலில் இருந்த காயத்தின் மீது உப்பு போடப்பட்டது. மேலும் அவர் ஒரு குழாயின்கீழ் கட்டப்பட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.

2021, மே 5 ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு பலவீனமாக, ஆபத்தான நிலையில் இருந்த செல்வி ஹுவாங்கை மூவரும் எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் எந்தப் பலனும் இல்லை. இறுதியாக அவசர வாகனத்தை அழைக்க முடிவு செய்து​​ அதிகாரிகளிடம் பொய் சொல்ல மூவரும் ஒப்புக்கொண்டனர்.

செல்வி ஹுவாங்கின் உடலில் இருந்த காயங்களைக் கண்ட மருத்துவ உதவியாளர்கள், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதை உறுதி செய்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மறுநாள் திருமதி ஹுவாங்கிற்குப் பெரும் காயம் ஏற்படுத்தியதாக ஹுவாங் போகேன்மீது குற்றம் சாட்டப்பட்டது. மே 11 அன்று லிம் கைது செய்யப்பட்டு அன்று முதல் காவலில் வைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரான ஹுவாங் போகேன்மீது முதலில் குற்றம்சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரான ஹுவாங் போகேன்மீது முதலில் குற்றம்சாட்டப்பட்டது. - படம்: ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்