2020ஆம் ஆண்டில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் ஒருமுறை நிரப்புதொகையாக $500 நிரப்பப்பட்டது.
இதைப் பெற்றவர்களில் 26 விழுக்காட்டினர் (ஏறத்தாழ 690,000 சிங்கப்பூரர்கள்) அந்த வழங்குதொகையைப் பயன்படுத்திவிட்டனர்.
இந்த வழங்குதொகை 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.
இந்த $500 வழங்குதொகையைப் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி கேட்டதை அடுத்து, இப்புள்ளிவிவரங்களை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு டிசம்பர் 3ஆம் தேதியன்று வெளியிட்டது.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 25 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் இத்தொகை வழங்கப்பட்டது.
அவர்களது பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஆதரவு தரும் இலக்குடன் இந்த $500 வழங்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 40 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பலர் இந்த வழங்குதொகையைப் பயன்படுத்தினர்.
இந்த வயதுப் பிரிவினரில் 31 விழுக்காட்டினர் இந்த $500 வழங்குதொகையைப் பயன்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
60 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களில் 21 விழுக்காட்டினர் மட்டுமே இத்தொகையைப் பயன்படுத்தினர்.
மற்ற வயதுப் பிரிவினரில் ஏறத்தாழ 30 விழுக்காட்டினர் வழங்குதொகையைப் பயன்படுத்தினர்.
சிங்கப்பூரர்கள் 25 வயதாகும்போது அவர்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் நிரப்பப்படும் $500 தொகையும் இந்த வழங்குதொகையும் ஒன்றல்ல.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி 40 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு கூடுதலாக $500 வழங்கப்பட்டது.
பணியிடைக்கால மாற்றுக்கு ஆதரவாக இத்தொகை வழங்கப்பட்டது.
இந்த இரண்டு வழங்குதொகையும் காலாவதியாகாது.
2024ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதியன்று 40 வயதும் அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு கூடுதலாக $4,000 வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு வழங்கப்பட்ட பணியிடைக்கால ஆதரவுத் தொகை எஞ்சியிருந்தால் அதை இந்த $4,000 வழங்குதொகையுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
தகவல் தொடர்பு, உணவு மற்றும் பானத்துறை, பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை ஆகிய மூன்று துறைகள் தொடர்பான பயிற்சிகளுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.