செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாதிருந்த பயணிகளுக்கு மொத்தமாக 7.115 மில்லியன் வெள்ளி (7,114,850 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 23,000க்கும் அதிகமான பயணிகளுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக திங்கட்கிழமை (டிசம்பர் 1) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் சுங்கத்துறை தெரிவித்தது.
எல்லைப் பகுதிகளில், வெளிநாடுகளில் பெறப்பட்ட, வரி செலுத்தவேண்டிய பொருள்கள் தங்களிடம் இருந்தது பற்றி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆகாய, நில, நீர் சோதனைச்சாவடிகளில் அத்தகைய பயணிகள் பிடிபட்டனர்.
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை, சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் விதிக்கப்பட்டதைவிட இரு மடங்குக்கும் மேல் அதிகமாகும்.
சென்ற ஆண்டு ஜனவரியிலிருந்து அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் 3.471 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. 2023ல் அதே காலகட்டத்தில் இத்தொகை 2.303 மில்லியன் வெள்ளியாக இருந்தது.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் 23,742 பயணிகள் பிடிபட்டனர். சென்ற ஆண்டு இந்த எண்ணிக்கை 13,099ஆகவும் 2023ல் 7,130ஆகவும் பதிவானது.
சிங்கப்பூர் சுங்கத்துறை, சோதனை நடத்தி விதிமீறல்களை அடையாளம் காண குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறது. இவ்வாண்டு பிடிபட்டோரில் 142 பேருக்கு அதிகபட்ச அபராதமாக 5,000 வெள்ளி விதிக்கப்பட்டதென சுங்கத்துறை தெரிவித்தது.
தவறான தகவல்களை அளித்தது அல்லது முழுமையாகத் தகவல் தெரியப்படுத்தாததற்காக அவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. 2024ல் 42 பேருக்கு மட்டுமே அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. 2023ல் அந்த எண்ணிக்கை 51ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
வரி செலுத்தவேண்டிய பொருள்களுக்கு சுங்கச்சாவடிகளில் பொருள், சேவை வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தாதிருப்பது பெரிய குற்றம் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அக்குற்றத்தைப் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
பயணிகள் Customs@SG எனும் இணையச் செயலி மூலம் முன்கூட்டியே வரி விதிப்பு பொருள்கள் பற்றிய தகவலைத் தெரிவிக்கலாம் அல்லது விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் உள்ள சுங்கதுறைக் கூடங்களைப் பயன்படுத்தலாம்.

