தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் 63,000 பேருக்கு 7% சம்பள உயர்வு

2 mins read
d14ed4da-998a-49ad-82f0-267ee4826eef
பணவீக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்குத் தொடர்ந்து வருடாந்தரச் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் ஏறக்குறைய 63,000 பேர் ஜூலை 1ஆம் தேதி முதல் 7 விழுக்காட்டு ஊதிய உயர்வைப் பெறுவர்.

ஊழியர்களை மேம்பட்ட முறையில் ஈர்க்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் அந்தத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கை இது.

குறிப்பாக, அத்துறையைச் சேர்ந்த துணை நிலை ஊழியர்கள், மருந்தாளர்கள், நிர்வாகப் பிரிவினர் உள்ளிட்ட 37,000 பேருக்கு அதிகபட்சமாக 7 விழுக்காட்டுச் சம்பள உயர்வு வழங்கப்படும்.

கடந்த முறை இந்தப் பிரிவினர் 2021ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு பெற்றனர்.

மேலும், பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் தாதியர் 26,000 பேருக்கும் சம்பள உயர்வு அளிக்கப்படும். இருப்பினும் இவர்களுக்கு அதிகபட்சம் 4 விழுக்காட்டுச் சம்பள உயர்வு அளிக்கப்படும். கடந்த ஆண்டு அறிமுகமான ‘ஏஞ்சல்’ எனும் தாதியர் விருதுக்குமேல் இந்த ஊதிய உயர்வும் வழங்கப்படும்.

அந்த விருது, தாதிமைத் துறைக்கு ஊழியர்களை ஈர்த்து, வாழ்நாள் முழுவதும் அதில் வேலைசெய்யத் தாதியரை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

வருடாந்தர ஊதிய உயர்வுக்கு அப்பாற்பட்ட இந்தச் சம்பள உயர்வால் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு மேம்பட்ட முறையில் ஊழியர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

பணவீக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில் அவர்களுக்குத் தொடர்ந்து வருடாந்தரச் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அது சொன்னது.

சிறந்த பராமரிப்புக்கான ஊக்க சக்தியாக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் விளங்குவதாகவும் அந்தத் துறை போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய வழக்கமான இடைவெளியில் சம்பள மறுஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

ஊழியர்களின் சம்பளத்தை மேம்படுத்துவதில் பொதுச் சுகாதாரத் துறைக் குழுமங்களின் அணுக்கமான ஒத்துழைப்புக்குச் சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர் சங்கத் (HSEU) தலைவர் கே. தனலட்சுமி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு, நியாயமான, போட்டித்தன்மை மிக்க சம்பளத்தின் வழியாக அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அவர்கள் நலனில் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டிற்கு வலுவூட்டுகிறோம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்