பள்ளிச் சிற்றுந்தின்கீழ் சிக்கி 5 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன்

பள்ளிச் சிற்றுந்தின்கீழ் சிக்கி 5 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன்

2 mins read
ed69e439-74cb-4e48-ab2f-3c1408bab06a
சிற்றுந்திலிருந்து இறங்கிய சிறுவன் அதன் முன்னால் சென்று சாலையைக் கடக்க முயன்றபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. படம்: சாவ் பாவ் -

ஏழு வயது சிறுவன் ஒருவன் பள்ளிச் சிற்றுந்தின்கீழ் சிக்கிக்கொண்டு ஐந்து மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் புக்கிட் பாத்தோக்கில் நிகழ்ந்தது.

சிற்றுந்திலிருந்து இறங்கிய சிறுவன் அதன் முன்னால் சென்று சாலையைக் கடக்க முயன்றபோது இவ்விபத்து நிகழ்ந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

கடந்த திங்கட்கிழமை புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5ல் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. காவல்துறை பேச்சாளர் ஒருவரும் இதேபோன்று தெரிவித்தார். அந்தச் சிற்றுந்து மோதியதில் மாணவன் கீழே விழுந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

சிற்றுந்தின்கீழ் சிறுவன் இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்து திடுக்கிட்ட தாம் உடனடியாக ஓட்டுநரைப் பார்த்து குரல் எழுப்பியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஸாங் செங்குஸு, 67, என்பவர் கூறினார்.

சிற்றுந்தின் பின்சக்கரங்களுக்கு இடையில் சிக்கி சிறுவன் இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் பேருந்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, கீழே இறங்கிவந்த ஓட்டுநரும் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சிறுவனை மீட்டதாகவும் சிறுவனை அழைத்துச் செல்ல அங்கு வந்திருந்த சிறுவனின் பாட்டியும் ஐந்து வயது சகோதரியும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் திரு ஸாங் தெரிவித்தார்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சிறுவன் சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது. சிற்றுந்தின் 57 வயது ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார். இந்நிலையில், காயங்கள் கடுமையாக இருந்ததாகவும் சிறுவன் இன்னும் வீடுதிரும்பவில்லை என்றும் சிறுவனின் தந்தை வியாழக்கிழமை (மார்ச் 30) கூறினார்.