சிங்கப்பூரிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸ்ஸுக்கு ‘பிரின்செஸ் க்ரூசஸ்’ கப்பலில் ஒரு மாதப் பயணம் மேற்கொண்டிருந்த 70 பேர், வயிற்றுப்போக்கு, வாந்தியால் உடல்நலப் பாதிப்புக்குள்ளாயினர்.
அவர்களில் 55 பேர் பயணிகள். மீதி 15 பேர் கப்பலில் பணியாற்றுவோர்.
1,822 பயணிகள், 907 ஊழியர்களுடன் ‘கோரல் பிரின்சஸ்’ கப்பல் அக்டோபர் 17ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து கிளம்பியது. இந்த கிருமித்தொற்று நவம்பர் 9ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
இத்தொற்றுக்கான காரணம், ‘நோரோவைரஸ்’ எனும் கிருமி என அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் அதன் இணையத்தளத்தில் கூறியது.
இக்கிருமி அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது.
கிருமி தொற்றிய உணவினாலும், பாதிப்படைந்தவருடனான தொடர்பினாலும் - உதாரணத்திற்கு, சமைக்கும் கரண்டிகளையும் பாத்திரங்களையும் பகிர்வது - இக்கிருமி எளிதாகவும் விரைவாகவும் பரவுகிறது என சிங்கப்பூர் உணவு அமைப்பு (எஸ்எஃப்ஏ) அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.
“மேசைகள், சமைக்கும் கரண்டிகள் போன்றவற்றின்மேல் இக்கிருமி இரு வாரங்கள் வரை உயிருடன் நீடிக்கும்,” என எஸ்எஃப்ஏ குறிப்பிட்டது.
கிருமியால் பாதிப்படைந்ததிலிருந்து 12 முதல் 48 மணி நேரத்திற்குள் நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். அவை ஒன்றிலிருந்து மூன்று நாள்கள் வரை நீடிக்கும் என எஸ்எஃப்ஏ கூறியது.
தொடர்புடைய செய்திகள்
கப்பல் நவம்பர் 17ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸ்ஸைச் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அக்கப்பல் கூடுதல் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், கிருமித்தொற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

